'கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்' இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு
கொழும்பு: சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவேன் என்றுகூறி வந்த நிலையில், 'கோத்தபய ராஜபக்சேவிடம் தான் பேசிக்கொண்டு தான் இருப்பதாகவும், தற்போதைக்கு அவர் நாடு திரும்ப மாட்டார் எனவும்' இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் திண்டாடினர்.
பண வீக்கம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டியது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது

வரலாறு காணாத வன்முறை
இதன் காரணமாக பெட்ரோல், டீசல், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவியது. எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்து பொருட்கள் என எதற்கும் தட்டுப்பாடு நிலவியதால், தவித்து போன இலங்கை மக்கள் தலைநகர் கொழும்புவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வரலாறு காணாத வன்முறையும் வெடித்தது. தங்களின் இந்த மோசமான நிலைக்கு காரணமான ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் தீவிரம் அடைந்தது.

நாட்டை விட்டு ஓட்டம்
இதனால், பதறிப்போன மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், நான் பதவியில் இருந்து விலக மாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டு அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்த கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகைக்குள் மக்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, நிலமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறியதோடு, கடந்த மாதம் 13-ந் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தப்பய ராஜபக்சே நான் நாட்டை விட்டு ஓடவில்லை என்றும், விரைவில் இலங்கை வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நிலைமை மேலும் மோசமாகும்
இதற்கிடையே, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இலங்கையை மறுகட்டமைக்க உதவ வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த ரணில் விக்ரமசிங்கே, ''முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும், கோத்தபய ராஜபக்சே தற்போதைய அரசியல் சூழலில் இலங்கைக்கு வந்தால் நிலைமையை மேலும் கொந்தளிப்பாக்கி விடும்'' என்றும் கூறினார்.
Recommended Video

குடும்பத்தினருடன் சிங்கப்பூரில். .
மேலும், நிர்வாக காரணங்கள் மற்றும் அரசின் பிற செயல்பாடுகள் தொடர்புகளுக்காக கோத்தபய ராஜபக்சேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், கோத்தபய ராஜபக்சே தற்போதைக்கு திரும்புவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சம் பெற்றதையடுத்து, நாட்டில் இருந்து வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே, தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருக்கிறார். கோத்தபய ராஜபக்சேவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே உள்பட குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மேலும் சிலரும் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications