எல்லாமே பொய்யா.. 9 மாதமாக கர்ப்பிணியாக நடித்த பெண்.. காரணத்தை கேட்டால்.. பரிதாபம்!
கடலூர்: கடலூரில் தனது கணவரின் குடும்பத்தினருக்கு பயந்து பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக 9 மாதங்கள் நடித்து வந்த சம்பவம் அனைவரையும் பரிதாபப்பட செய்துள்ளது.
9 மாதங்களும் தனது வயிற்றில் துணிகளை சுற்றி வைத்து அந்தப் பெண், தான் கர்ப்பமாக இருப்பதாக கணவரின் குடும்பத்தினரை நம்ப வைத்து வந்துள்ளார்.
குழந்தை இல்லாமல் இருந்தால் நம் சமூகம் அவர்களை எப்படியெல்லாம் நடத்துகிறது, எப்படியெல்லாம் அழுத்தம் கொடுக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த சான்றாக இருக்கிறது.

பக்குவமற்ற மனிதர்கள்..
இன்னும் எத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்தாலும், விழிப்புணர்வு ஏற்பட்டாலும் சில விஷயங்களில் இருந்து நம் சமூகத்தை திருத்தவே முடியாது. அதில் முக்கியமானது, திருமணம் ஆகியதுமே, குழந்தை வந்துவிட்டதா எனக் கேட்டு தம்பதியரை நச்சரிக்கும் விஷயம். திருமணம் முடிந்து 6 மாதம் கூட ஆகியிருக்காது. ஆனால், அனைவரின் முன்னிலையிலும், "என்னம்மா இன்னும் நீ குழந்தை உண்டாகலயா.." என கேட்கும் பக்குவமற்ற உறவினர்கள் இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்கு பயந்தே குழந்தை இல்லாத தம்பதியர் பல குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்லவே பயந்து போய் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், குழந்தை பெறாத பெண்களுக்கு ஒரு பெயரையும் இந்த சமுதாயம் வைத்துவிடும். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண்களும், தம்பதியரும் தற்கொலை செய்து கொள்வது இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தத்தினால் தான் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என தெரியவில்லை. அப்படி இந்த சமூகத்துக்கு பயந்து இளம்பெண் செய்த காரியத்தை தான் இங்கு பார்க்க போகிறோம்.

அடுத்தடுத்து கருக் கலைந்தது..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சீதா (23). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தை இல்லை. இரண்டு முறை சீதா கர்ப்பம் தரித்த போதிலும், பாதியிலேயே கரு கலைந்துள்ளது. இதனால் அவரது கணவரின் குடும்பத்தினர், சீதாவை குழந்தை பெற தகுதியில்லாதவர் எனக் கூறியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தான், மூன்றாவது முறையாக சில மாதங்களுக்கு முன்பு சீதா கருத்தரித்துள்ளார். அதன் பின்னர், சீதாவின் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

கர்ப்பிணியாக நடிப்பு..
இந்நிலையில், கருத்தரித்த சில வாரங்களிலேயே இந்த கருவும் கலைந்துள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால், கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என சீதா பயந்திருக்கிறார். எனவே, கரு கலைந்ததை யாரிடமும் கூறாத சீதா, தான் கர்ப்பமாக இருப்பதாகவே நடிக்க தொடங்கினார். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல.. 9 மாதங்கள் இவ்வாறு நடித்துள்ளார் சீதா. இதற்காக வயிற்றில் துணிகளை கட்டி வீட்டில் உள்ள அனைவரையும் சீதா நம்ப வைத்து வந்துள்ளார்.

வெளியான உண்மை - பரிதாபம்..
இதனிடையே, 9 மாதங்கள் ஆன நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் குழந்தை எப்போது பிறக்கும் என கேட்க தொடங்கினர். இதனால் கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சீதா தனியாக புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனியாக செல்வதை தடுத்த அவரது மாமியார், சீதாவுடன் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற சீதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் துணிகளை கட்டி வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த விஷயத்தை அவரது மாமியாருக்கு கூறிய மருத்துவர்கள், போலீஸுக்கும் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் சீதாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அறிவுரையும், கவுன்சிலிங்கும் கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.