சாலை மறியல் செய்த விசிக தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி - நெல்லிக்குப்பத்தில் விடிய விடிய பதற்றம்
நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்: மறைமுக தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியைக் கைப்பற்றியதால் நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்எல்ஏவின் காரை முற்றுகையிட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் உருவானது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விடிய விடிய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற பிப்ரவரி 19ஆம் தேதி பதற்றங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்து விட்டது. ஆனால் மறைமுக தேர்தல் சண்டை, சச்சரவு, கல்வீச்சு, பதற்றம், சாலை மறியல், போலீஸ் தடியடி என பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் நடந்து முடிந்துள்ளது.
கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த நகர்மன்றத் தலைவர் பொறுப்பு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சி
நெல்லிகுப்பத்தில் இரண்டு விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கு திமுக போட்டி வேட்பாளரை நிறுத்தியது. அதன் காரணமாக நேற்று காலை நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஜெயந்தி என்பவர் வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தோல்வியடைந்தனர். மாலையில் நடைபெற்ற துணைதலைவர் தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக திமுக போட்டியிட்டது. துணைத்தலைவர் தேர்தலிலும் திமுக வெற்றி அடைந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் அடைந்தனர்.

விசிகவினர் போராட்டம்
இந்த நிகழ்வு குறித்து நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் நெல்லிக்குப்பம் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லிய போது திடீரென துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எம்எல்ஏ கார் முற்றுகை
எம்எல்ஏ சபா ராஜேந்திரன் அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது அவருடைய காரினை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அவர்கள் கூட்டணிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த நெல்லிக்குப்பம் நகராட்சி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

போலீஸ் தடியடி
அப்போது சிலர் எம்எல்ஏவின் காரை வேகமாக தட்ட துவங்கியதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த நிலையில் எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நெல்லிக்குப்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் அங்கு விடிய விடிய குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications