இன்பநிதியை முதலமைச்சராக்கி விட்டு தான் என் உயிர் போகனும்! திமுக தலைமைக் கழக பேச்சாளர் ராஜன் ஆசை!
கடலூர்: இன்பநிதியை முதலமைச்சராக ஆக்கிவிட்டு தான் தனது உயிர் போக வேண்டும் என திமுக தலைமைக்கழக பேச்சாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜன் பேசியிருக்கிறார்.
திமுககாரனின் மகன் திமுக கொடியை தூக்கி பிடிக்காமல் வேறு எந்தக் கொடியை தூக்கி பிடிப்பான் என வினவிய அவர் வாரிசு அரசியலை பற்றி விமர்சித்தவர்களை வறுத்தெடுத்தார்.
கடலூரில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் உதயநிதி
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து வாரிசு அரசியல் என அவரை நோக்கி விமர்சனக் கணைகள் வருகின்றன. இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.ராஜன், உதயநிதிக்கு திறமை இருப்பதாலேயே அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதாகவும் திமுககாரர்களே ஏற்றுக்கொள்ளும் போது வெளியே இருப்பவர்களுக்கு என்ன வந்தது எனக் கேட்டார்.

இன்பநிதி
மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக கூட வருவார் என்றும் திமுகவில் உயர்ந்த பதவியை கூட அவர் அடையலாம் எனவும் ராஜன் பேசினார். உழைப்பால் உதயநிதி முன்னேறி வருகிறார் என்றும் இதில் அண்ணாமலைக்கு என்ன சங்கடம் எனவும் ராஜன் கேள்வி எழுப்பினார். தனக்கு இன்னொரு ஆசை இருப்பதாகவும் ஆனால் அதுவரை தனக்கு ஆயுள் இருக்குமா என்பது தெரியவில்லை எனவும் புதிர் போட்ட அவர், உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதலமைச்சராக்கி விட்டு தான் என் உயிர் போகனும் என ஒரே போடாக போட்டார் ராஜன்.

வி.பி.ராஜன் பேச்சு
இதைக்கேட்ட திமுகவினர் சற்று ஜெர்க் ஆனாலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தனர். கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் நமக்கு தோதாக இருக்கமாட்டார்கள் என்று கட்சிக்காரர்களை நோக்கி கூறிய ராஜன், இன்பநிதி வரும் காலத்தில் தமிழக முதல்வராவார் எனப் பேசினார். வி.பி.ராஜன் விளையாட்டாக பேசினாரோ அல்லது சீரியஸாக பேசினாரோ தெரியாது, ஆனால் இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.

கஷ்டப்படுகிறோம்
ஈரோடு மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி அரசியலுக்கு வருவார், அமைச்சராக ஆவார் என தாம் பேசியதாகவும் அது இன்று பலித்தது போல் இன்பநிதி விவகாரத்திலும் தாம் கூறியது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே பேச்சோடு பேச்சாக ஆட்சியிலிருந்தும் திமுகவினர் இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் எனப் பேசி தலைமைக்கு யதார்த்த நிலையை உணர்த்தினார்.












Click it and Unblock the Notifications