10 ஆண்டுகளில் பெண்கள் நலனுக்காக மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு 281.8% உயர்வு: பொருளாதார ஆய்வறிக்கை!
டெல்லி: நாட்டின் 10 நிதி ஆண்டுகளில் பெண்கள் நலன், அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடானது 281.8% அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15-ம் நிதியாண்டில் இருந்ததைவிட, 2024-25-ம் நிதியாண்டில் பெண்களின் நலனுக்கும் அதிகாரமளித்தலுக்கும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 218.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது அந்த பொருளாதார ஆய்வறிக்கை.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2014-15 ஆம் நிதியாண்டில் பெண்கள் நலனுக்கான ஒதுக்கீடு ரூ. 97,134 கோடியாக இருந்தது. 2024-25-ல் ரூ. 3.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பெண்களின் வளர்ச்சியிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா மாறி வருகிறது. இந்தியப் பொருளாதாரம் கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் மீட்சியை உறுதிப்படுத்தி, வலுவான, நிலையான அடித்தளத்தில் உள்ளது .

மகளிர் சக்திக்குரிய தெளிவான அழைப்பை நிறைவேற்ற, பல்வேறு தொழில்களில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை உறுதி செய்வதில் இருந்துதான் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி தொடங்குகிறது.
தேசிய அளவில் பிறப்பு பாலின விகிதம் 2014-15-ல் 918 என்பதிலிருந்து 2023-24-ல் 930 ஆக மேம்பட்டுள்ளது, மேலும் பேறுகாலத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் 2014-16 ல் ஒரு லட்சத்திற்கு 130 என்ற விகிதம் 2018-20-ல் ஒரு லட்சத்திற்கு 97 -ஆக குறைந்துள்ளது.
"பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை நேசித்தல், கல்வி அளித்தல், அவர்களுக்காக சேமித்தல் ஆகியவற்றை உணர்த்துகிறது.
பிரதமரின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் உதவியுடன் மருத்துவமனையில் மகப்பேறுகளின் பாதிப்பு 2015-16-ம் ஆண்டில் 78.9 சதவீதத்திலிருந்து 2019-21-ம் ஆண்டில் 88.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள் பெண்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாலின-குறைபாடுகளைச் சமாளிப்பதற்கும் உதவுவதில் கவனம் செலுத்தியுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டுதல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குதல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டச்சத்து 2.0 திட்டம், பெண்களின் ஊட்டச்சத்து தன்னிறைவு மூலம் மேம்பட்ட ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. பெண்களுக்கு அதிகாரமளித்தலின் மையமாக பெண் கல்வி உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக உயர்கல்வியில், பெண்கள் சேரும் விகிதம் ஆண்களை விட அதிகரித்து வருகின்றன.
பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளித்ததன் விளைவாக, அதிக அளவிலான பெண்கள் கல்வி பெறவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறவும் அதிக வாய்ப்புகள் கிடைத்து நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருப்போரில், 55.6 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின், தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் 8 கோடியே 90 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட கடன்களில் 68% பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், 77.7% பெண்கள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் ஊரக டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் பயனடைந்தவர்களிலும் 53 சதவீதத்தினர் பெண்கள். இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications