பரபர திமுக- 2ஜி வழக்கில் ஆ.ராசா. கனிமொழி விடுதலைக்கு எதிரான சிபிஐ அப்பீல் மனு- மார்ச் 18-ல் விசாரணை!
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுகவின் மூத்த தலைவர்களான ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச் 18-ல் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் 2ஜி வழக்கில் சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெறுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. அப்போது மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார். ஆ.ராசாவின் பதவி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக பூடகமாக இந்திய தணிக்கைத் துறை தெரிவித்தது. இது இந்திய அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் மூத்த தலைவர்களான ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஆ.ராசா. கனிமொழி தொடர்பான இந்த 2 ஜி அலைக்கற்றை வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி விசாரித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் கடந்த
2017-ம் ஆண்டு நீதிபதி ஓபி ஷைனி விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் தாம் முறைகேட்டில் ஈடுபடவில்லை என ஆ.ராசா, தாமே வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடியது பெரும் கவனம் பெற்றது.
இதனையடுத்து ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பாக முதலில் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக முதலில் 6 நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் 7-வது நீதிபதியாக தினேஷ்குமார் சர்மாவும் இந்த வழக்கை விசாரித்தார். இறுதியாக கடந்த ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அதேநேரத்தில் இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்த பின்னணியில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில், மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை நடைபெறும் தேதிகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக மார்ச் 18-ந் தேதி விசாரணை நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications