ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 19 லட்சமா? அப்படி என்னதான் இருக்கு.. வாய் பிளந்த நெட்டிசன்கள்
டெல்லி: இந்தியாவின் அதி நவீன சொகுசு ரயில்களில் ஒன்றான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 19 லட்சம் கொடுத்து பயணம் செய்த இளைஞர் ஒருவர் , இது போன்ற ஆடம்பர பயணத்தை அனுபவித்தது உண்டா ? என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரயிலில் உள்ள சொகுசு வசதிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
பொதுவாக ரயில் பயணங்கள் என்றாலே எங்கும் பயணிகள் கூட்டம், பிளாட்பார்ம்களில் ஒயாத சத்தம் என்பதே நம் அனைவரது நினைவுக்கும் வரும்.
ஆனால் அதையும் தாண்டி ரயில் பயணங்களை விரும்பாத பயணிகளே இருக்க முடியாது. கார், விமானங்கள் என போக வசதி இருந்தாலும் ரயில் பயணத்தை விரும்பி அதில் பயணிக்கும் பயணிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சொகுசு வசதிகள் உள்ள ரயில்கள்
மலிவானது மட்டும் இன்றி பாதுகாப்பானதும் கூட என்பதால் பணக்காரர்கள் முதல் ஏழை எளிய மக்கள் என அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வேயும் அதிக அளவில் ரயில்களை இயக்கி வருகிறது. இப்படி இந்தியாவின் போக்குவரத்திற்கு முதுகெலும்பாக இந்திய ரயில்வே உள்ளது. பயணிகளின் வசதிக்காக பல்வேறு சொகுசு வசதிகள் அடங்கிய ரயில்களும் இயங்கி வருகின்றன.

மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், வந்தே பாரத் ரயில், சதாப்தி ரயில் என பயணிகளுக்கு விமான பயணத்தை விட அதிக சொகுசுகள் நிறைந்த வசதிகளை இந்த ரயில் சேவைகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் இந்த சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 4 வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் இதில் ஏதேனும் ஒரு வழித்தடத்தில் பயணம் செய்ய புக் செய்ய முடியும்.

பிரசிடன்சியல் சூட் டிக்கெட்
அதாவது 7 நாட்கள் வரை புக்கிங் செய்து பயணிக்க முடியும். இந்த ரயிலில் நட்சத்திர விடுதிகளுக்கு நிகரான ரூம்கள் உள்ளன. வெளியில் இயற்கை காட்சிகளை ரசித்து செல்லும் வகையில் விசாலமான கண்ணாடிகள் என பார்க்க.. பார்க்க.. வியக்கும் அளவுக்கு சொகுசு வசதிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பிரசிடன்சியல் சூட் டிக்கெட்டை புக் செய்த பயணி ஒருவர், அந்த ரயில் பெட்டியில் உள்ள சொகுசு வசதிகளை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

19 லட்சம் ரூபாய்..
இந்தப் பதிவை பார்த்து நெட்டிசன்கள் வாய் பிளந்துள்ளனர். ஏனென்றால், 4 பேர் வரை பயணிக்க முடியும் இந்த பிரசிடன்சியல் சூட் அறையில் அவ்வளவு வசதிகள் நிறைந்துள்ளன. சாப்பிடுவதற்கான தனி அறை, ஷவர் வசதியுடன் கூடிய குளியல் அறை, இரண்டு பெட்ரூம்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் கட்டணம்தான் பலரையும் ஷாக் ஆக வைத்துள்ளது. இந்த டிக்கெட்டின் விலை 19 லட்சம் ரூபாய் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட குஷகரா என்பவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பயணியின் கேரேஜிற்கும் தனித்தனி பணியாட்கள், மினி பார், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி வை ஃபை வசதி, தொலைக்காட்சி, டிவிடி பிளேயர்கள் என வசதிகளை நிரம்பியுள்ளன.

"சொந்த வீடு வாங்கி விடுவேன்"
கடந்த நவம்பர் மாதம் இந்த வீடியோவை குஷர்கா என்பவர் தனது இன்ஸ்டாகிரமில் பகிர்ந்து இருந்தார். நெட்டிசன்கள் பலரும் வியந்து பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு நெட்டிசன் கூறுகையில், "இவ்வளவு தொகை கொடுத்து இந்த ரயிலில் பயணிப்பதற்கு பதிலாக நான் சொந்தமாக இடம் வாங்கி விடுவேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இந்த பணத்தை கொண்டு நான் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு டூர் அடித்து விடுவேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications