திகார் சிறை வேண்டாம்.. அபிஜித் தீப்கேவிற்கு நிபந்தனை ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவால் ‘கிரேட் எஸ்கேப்’
டெல்லி: டெல்லியில் நேற்று தடையை மீறி தேசியக்கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை போலீசார் கைது செய்தனர். இரவு ஆகியும் அவரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர் மீது புதிதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அபிஜித் தீப்கேவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதால் அபிஜித் தீப்கே ஹேப்பியானார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு நேற்று போலீசார் அனுமதி வழங்கவில்லை.
அதுமட்டுமின்றி அபிஜித் தீப்கே இந்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று போலீசார் 2 நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அபிஜித் தீப்கே அதனை மதிக்கவில்லை.
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) செய்தி தொடர்பாளர் அனிஷ் கவாண்டி வீட்டில் தங்கியிருந்த அபிஜித் தீப்கே கையில் தேசியக்கொடி ஏந்தி நேற்று மாலையில் போராட்டத்திற்கு புறப்பட்டார். அவரை போலீசார் வீட்டு வாசலிலேயே மடக்கி பிடித்து கைது செய்தனர். போராட்டத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பொதுவாக இப்படி முன்னெச்சரிக்கை கைது செய்யப்பட்டதால் அவர்களை மாலை 6 மணிக்கு மேல் போலீசார் விடுவிப்பார்கள். ஆனால் அபிஜித் தீப்கேவை போலீசார் தற்போது வரை விடுவிக்கவில்லை. இதனால் போலீசார் அபிஜித் தீப்கேவை சிறையில் அடைக்க முடிவெடுத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் அபிஜித் தீப்கே மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 170 (முன்கூட்டிய கைது) மற்றும் 126 (அமைதியை மீறுவதற்கான பிணையை மீறுதல்) என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் தற்போது அபிஜித் தீப்கேவிற்கு சிக்கலை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி அபிஜித் தீப்கேவை திகார் சிறையில் அடைக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று மாலை சுமார் 4.45 மணிக்கு போலீசார் அபிஜித் தீப்கேவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். டெல்லி சிறப்பு எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் முன்பு அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் பாண்ட்டுடன் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனால் அபிஜித் தீப்கே திகார் சிறைக்கு செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 10ம் தேதி அபிஜித் தீப்கேவை போலீசார் டெல்லியில் போராட விடாமல் விமானத்தில் வைத்து கைது செய்தனர். மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் ரூ.50 ஆயிரம் பிணையும் அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று கையெழுத்து வாங்கினர். இதன்மூலம் அனுமதியில்லாத போராட்டங்களில் அபிஜித் தீப்கே பங்கேற்க கூடாது. அப்படி பங்கேற்றால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்.
ஆனால் அபிஜித் தீப்கேவின் நேற்றைய போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதோடு போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அவர் போராட முயன்றதால் கைது செய்யப்பட்டார். இதனால் தான் அவர் இன்று நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட வாய்ப்புள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஏனென்றால் அபிஜித் தீப்கேவிற்கு முன்பாக கரப்பான்பூச்சி கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா என்று 2 பேரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளனர்.
இவர்கள் 3 பேரும் தான் கடந்த 10ம் தேதி விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, ஓராண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 14ம் தேதி சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராடியதால் கைது செய்யப்பட்டதோடு 5 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த பாணியில் அபிஜித் தீப்கேவையும் போலீசார் திகார் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது நடக்கவில்லை. திகார் சிறைக்கு செல்வதில் இருந்து அபிஜித் தீப்கே தப்பினார்.


Click it and Unblock the Notifications
