இனி மின்னல் வேகம்தான்.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் 5 ஜி சேவையை தொடங்கியது.. என்ன ஸ்பீட் தெரியுமா?
டெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது இந்திய கைப்பேசி மாநாட்டை தொடக்கி வைத்த பிரதமர் மோடி ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது 5ஜி சேவை குறித்து அறிவித்திருக்கிறது. வரும் 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை கொண்டு சேர்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்து தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய சந்தையை இந்தியா கொண்டிருப்பதால் 5ஜி சேவையை தொடங்க கடும் போட்டி நிலவி வருகிறது.

5ஜி சேவை
இன்று தொடங்கி வரும் 4ம் தேதி வரை டெல்லி பிரகதி மைதானத்தில் 6வது இந்திய கைப்பேசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் செல்போன் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். நாட்டில் முதன் முறையாக டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனையடுத்து வரும் 2023ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு
ஆனால் தற்போது ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவை குறித்து பெரியதாக விளம்பரம் செய்யவில்லை. தனது சேவைகளின் தரம், கூடக் குறைய இருந்தாலும் விளம்பரத்திற்கு பஞ்சம் வைக்காமல் செய்து வரும் ஏர்டெல் இந்த மாநாட்டில் சத்தமில்லாமல் இருந்தது அனைவரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து 5ஜி சேவை குறித்து ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இன்று முதல் இந்தியாவின் 4 பெருநகரங்கள் 4 நகரங்கள் என மொத்தம் 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024க்குள்
இந்த சேவை வரும் 2024ம் ஆண்டுக்குள் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு முக்கிய நகரங்களில் 2023க்குள் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் நாடு முழுவதும் 2024க்குள் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் எனவும் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் 1ஜி தொடங்கப்பட்டபோது வயர் இல்லாமல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தகவல்கள் பரிமாறிகொள்ளப்பட்டன. அதன் பின்னர் வந்த 2ஜி SMS சேவையை அறிமுகப்படுத்தியது.

கிளவுட் சேவை
இப்படியாக இந்தியாவின் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் அடுத்தடுத்து வளர்ந்து 4ஜி வரை முன்னேறியது. இதனையடுத்து 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதை பெருமளவு ஜியோ நிறுவனமே கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. 5ஜி சேவை மூலம் நாம் தற்போது பெறும் இன்டர்நெட் வேகத்தை விட 100 மடங்கு அதிக வேகத்தை பெற முடியும். இதுவரை நாம் மெமரிகார்டு, பென்டிரைவ் ஆகியவற்றை பயன்படுத்தி வந்திருப்போம். இனி 5ஜி வந்துவிட்டால் எல்லாமும் கிளவுட் மூலம் சேமித்து வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications