ஆசியாவிலேயே முதல் நபர்.. இந்திய பெண் தலித் செயற்பாட்டாளருக்கு ஐ.நா. கொடுத்த அங்கீகாரம்!
டெல்லி: இனவெறி மற்றும் சகிப்பின்மை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆசியாவை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை இந்தியாவை சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் அஸ்வினி பெற்று இருக்கிறார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 47 உறுப்பினர்கள் உள்ளனர். உலகமெங்கும் அரங்கேறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்த அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
இதில் இனவெறி, ஏற்றத்தாழ்வு, அந்நியர் வெறுப்பு மற்றும் அது தொடர்பான சகிப்பின்மையால் ஏற்படும் செயல்பாடுகள் மற்றும் குற்றங்களின் பிரிவில் சிறப்பு அறிக்கையாளராக ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டை சேர்ந்த டெண்டாயி அக்கியூமே பணிபுரிந்து வந்தார்.
சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.. 'இந்தி திணிப்பு’ வேண்டாம்.. பொங்கிய வைகோ!

ராஜினாமா
இந்த நிலையில் டெண்டாயி அக்கியூமே தன்னுடைய 3 ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அதிலிருந்து ராஜினாமா செய்தார். டெண்டாயி அக்கியூமேவி எதிர்பாராத விலகல் காரணமாக அவரது இடத்தில் தகுதியான வேறொரு நபரை நியமிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது.

பேராசிரியர் அஸ்வினி
இந்த பதவிக்கு ஒரு நபரை நியமிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு 3 பேரை பரிந்துரைத்தது. அந்த 3 பேரில் இந்தியாவை சேர்ந்த பேராசிரியரும் தலித் செயற்பாட்டாளருமான அஸ்வினி கே.பி.யும் இடம்பெற்று இருந்தார். இவருடன் இந்தியாவை சேர்ந்த ஜோஷுவா காஸ்டெல்லினோ மற்றும் போட்ஸ்வானாவை சேர்ந்த யுனிடி டோ ஆகியோரது பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன.

நியமனம்
இந்த 3 பேரில் தகுதியான நபரை தேர்வு செய்வது ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவரின் பணி. இந்த நிலையில் தலித் செயற்பாட்டாளர் பேராசிரியர் அஸ்வினியை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இனவெறி பிரிவின் சிறப்பு அறிக்கையாளராக அதன் தலைவர் நியமித்து இருக்கிறார். ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 51 வது அமர்வில் அவர் நியமனம் செய்யப்பட்டார்.

முதல் இந்தியர்
இந்த அமைப்பின் இனவெறி பிரிவின் 6 வது சிறப்பு அறிக்கையாளரான அஸ்வினி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தனது பணியை தொடங்கிறார். இந்த பதவிக்கு ஆசிய கண்டத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் அஸ்வினி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த பிரிவு?
ஆப்பிரிக்க மக்கள், கருப்பினத்தவர்கள், அரேபியர்கள், இஸ்லாமியர்கள், ஆசிய பழங்குடிகள், புலம்பெயர் மக்கள், நாடற்றவர்கள், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உலகளவில் அதிகரித்து வந்த குற்றங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் இந்த பிரிவு கடந்த 1994 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

யார் இந்த அஸ்வினி?
தலித் சமுதாயத்தை சேர்ந்த 36 வயது பெண்ணான அஸ்வினி, பெங்களூரு புனித ஜோசப் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர். ஜரியா என்ற பெண்கள் உரிமைக்கான கூட்டமைப்பின் இணை நிறுவனராவார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்ற இவர், ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் மனித உரிமை அமைப்பின் மூத்த பிரச்சாரகராக பணியாற்றி இருக்கிறார்.