ரயில் பெட்டியை எண்ணுங்க..டெல்லியில் நடந்த மோசடி.. லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாந்துபோன தமிழக இளைஞர்கள்
டெல்லி: ரயில்வேயில் வேலை எனக் கூறி லட்சக்கணக்கில் தமிழக இளைஞர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு ஏமாற்றிய சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டத்திற்கு மத்தியில் டிடிஆர், ரயில்வே போலீசார் என ரயில்வே ஊழியர்களும் நடமாடுவதை பார்த்து இருப்போம்.
அதேபோலத்தான் டெல்லி ரெயில் நிலையத்தில் ரயிலில் எத்தனை பெட்டிகள் உள்ளன.. எத்தனை ரயில்கள் வருகிறது என எண்ணும் பணியில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

தமிழக இளைஞர்களிடம் மோசடி
அதுவும் தினமும் 8 மணி நேரம் இந்த பணியில் தினந்தோறும் தவறாமல் ஈடுபட்டு இருந்த இளைஞர்களை போலீசார் விசாரித்த போதுதான் மிகப்பெரிய வேலை வாய்ப்பு மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்தனைக்கும் இந்த மோசடியில் சிக்கிய இளைஞர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பதுதான் கூடுதல் வேதனைக்குரிய விஷயமாகும். இந்த மோசடி சம்பவம் குறித்த முழு விவரம் வருமாறு:-

டிடிஆர், கிளார்க் வேலை
எப்போதும் பரபரப்பாக இயங்கும் டெல்லி ரெயில் நிலையத்தில் கையில் ஒரு நோட்டுகளை வைத்துக்கொண்டு போகும் வரும் ரெயில்களை கணக்கெடுத்துக் கொண்டும், எத்தனை பெட்டிகள் உள்ளன என்று இளைஞர்கள் சிலர் குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தனர். இதைக் கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது தங்களுக்கு ரயில்வே துறையில் டிடிஆர், கிளார்க் வேலை உள்ளிட்ட பணிகள் கிடைத்து இருப்பதாகவும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

திடுக்கிடும் தகவல்கள்
இதைக் கேட்ட போலீசார் இதுபோல எந்த தகவலும் எங்களுக்கு இல்லையே என்று யோசித்து விட்டு..ஏதோ மோசடி நடந்துள்ளது என்பதை யூகிக்க தொடங்கினர். இதையடுத்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விருதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்புசாமி (வயது 78) என்பவர் தனது பகுதியில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தனக்கு செல்வாக்கு இருப்பதாக..
சுப்புசாமிக்கு கோவையை சேர்ந்த சிவராமன் என்பவருடைய அறிமுகம் கிடைத்து இருக்கிறது. டெல்லியில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் ரயில்வேயில் உயரதிகாரியாக பணியாற்றும் அதிகாரியுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் இதனால், ரயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து விடலாம் என்று சிவராமன் சொல்லியிருக்கிறார். இதை நம்பிய சுப்புசாமியும் தனக்கு தெரிந்த இளைஞர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இரண்டரை கோடி ரூபாய்
மொத்தம் 28 இளைஞர்கள் பல லட்சங்களை கொட்டி கொடுத்து இருக்கின்றனர். வேலை வாங்கி கொடுப்பதாக கூறிய சிவராமன்.. தனது தெரிந்த ராணா என்பவர் வடக்கு ரயில்வேயில் உயர் அதிகாரியாக இருக்கிறார் என்று கூறவே... அந்த ராணாவிடம் பணத்தை கொடுத்துள்ளனர். மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு ராணா வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2 லட்சம் முதல் 24 லட்சம் வரை பணத்தை ஒவ்வொரு நபரிடமும் ராணா வாங்கியிருக்கிறார்.

போலி பணி நியமன ஆணை
பணத்தை வாங்கிய ராணா.. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுப்பதற்கு முன்பாக உங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டி இருக்கிறது என்று கூறி ஒரு இடத்தில் தங்க வைத்து புத்தகங்களை கொடுத்து படிக்க வைத்துள்ளார். பயிற்சிகளில் ஒன்றாக ரயில்களை கணக்கெடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். பிறகு போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கியிருக்கிறார். இது அனைத்தும் ஏமாற்று வேலை என்பது பிறகுதான் தெரியவந்துள்ளது.

எத்தனை தமிழக இளைஞர்கள் ஏமாந்தனர்?
இதையடுத்து பதறிப்போன சுப்புசாமி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். விசாரணைக்கு பிறகே இதுபோல எத்தனை தமிழக இளைஞர்கள் ஏமாந்தனர் என்ற விவரம் தெரிய வரும். இதனிடையே, இதுபோன்ற போலி வேலைவய்ப்பு ஏமாற்றுக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்தின் ஊடக தொடர்பு கூடுதல் இயக்குனர் யோகேஷ் பாவ்ஜே தெரிவித்துள்ளார். ரயில்வே வேலை வாய்ப்புகள் மோசடி தொடர்பாக அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications