உதய்பூர் கொலையாளி பாஜகவை சேர்ந்தவரா? காங். வெளியிட்ட பகீர் படங்கள்! பாஜக திட்டவட்டமாக மறுப்பு
டெல்லி: உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடையை நடத்தி வந்தவர் 48 வயதான கன்ஹையா லால். இவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்ஹையா லால் கடைக்கு இருவர் துணி தைக்கக் கொடுப்பது போல வந்தனர். அப்போது திடீரென தாக்க ஆரம்பித்த அவர்கள் ஒரு கட்டத்தில் கன்ஹையா லாலின் தலையைக் கொடூரமாகத் துண்டித்து கொலை செய்தனர். இந்த குரூர சம்பவத்தை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர்.

கைது
இந்த படுகொலை சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கலவரம் ஏற்படுவதைத் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கோஸ் முகமது ஆகிய சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ்
இந்த நடவடிக்கையைப் பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதி, தேசியப் பாதுகாப்பு முகமை விசாரணைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இப்போது காங்கிரஸ் சில பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளது. அதாவது உதய்பூரில் படுகொலையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பாஜக உறுப்பினர் என்று குற்றஞ்சாட்டி உள்ள காங்கிரஸ், இந்த வழக்கை அவசர அவசரமாகத் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

ஃபோட்டோக்கள்
கன்ஹையா லாலின் கொலையாளி, ரியாஸ் அட்டாரி பாஜகவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இது தொடர்பான சில புகைப்படங்களையும் தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். கொலையாளி ரியாஸ் அட்டாரி பாஜக தலைவர்களான இர்ஷாத் செயின்வாலா மற்றும் முகமது தாஹிர் ஆகியோருடன் இருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பகீர் குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரியாஸ் அட்டாரி ராஜஸ்தான் பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்ற நபர். அவர் ராஜஸ்தான் பாஜகவின் சிறுபான்மை பிரிவின் கூட்டங்களில் அடிக்கடி பங்கேற்றுள்ளார். இது தொடர்பான படங்களைத் தான் இப்போது பகிர்ந்து இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக மறுப்பு
காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. குற்றவாளிகளில் யார் உடனும் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ள, பாஜகவின் ராஜஸ்தான் சிறுபான்மை பிரிவின் தலைவர் சாதிக் கான், இந்த படுகொலை ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்தின் தோல்வி என்று சாடினார்.

ஊடுருவல் முயற்சி
அதேபோல பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மாளவியாவும் இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நீங்கள் போலி செய்தியைப் பரப்புவதில் எனக்கு ஆச்சரியமில்லை. உதய்பூர் கொலையாளிகள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களின் ஊடுருவல் முயற்சி என்பது ராஜீவ் காந்தியைக் கொல்ல காங்கிரஸுக்குள் விடுதலைப் புலிகள் நுழைய முயன்றதை போன்றது" என்றார்.












Click it and Unblock the Notifications