'கண்காணிப்பில்' முஸ்லீம்கள்; சொத்து வாங்குவது விற்பது கணக்கெடுப்பு: உத்தரகண்ட் பாஜக அரசு நடவடிக்கை
டெல்லி: முஸ்லீம்களை குறி வைத்து உத்தரகண்ட் மாநில பாஜக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
முஸ்லீம்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பதாக கூறி, அவற்றை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது, மாநில அரசு என்பது உள்ளிட்ட சில நடவடிக்கைகள்தான் இதற்கு முக்கிய காரணம்.
கடந்த மாதம் 24ம் தேதி மாநில அரசு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும், போலீஸ் எஸ்பிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாராவது அந்தந்த மாவட்டங்களில் இருந்தால் அடையாளம் காண உத்தரவிடப்பட்டுள்ளது. "ஒரு குறிப்பிட்ட மதத்தினர்" மத்தியில் மக்கள் தொகை அதிகரிக்கிறது. இதனால் மத பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை சரி செய்ய கமிட்டிகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சொத்து விற்பனை கண்காணிப்பு
எங்கெல்லாம் மக்கள் தொகையில் பெருக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் நடைபெறும் சொத்து விற்பனை மற்றும் சொத்து கொள்முதலை கண்காணிக்க வேண்டும் என்று, முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார் என்றும், இதுபோன்ற பரிவர்த்தனைகளை அரசு சட்ட விரோத நடவடிக்கை என கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும் உத்தராகண்ட் மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம்கள் இலக்கு
குறிப்பிட்ட மதத்தினர் திடீரென அதிகரிப்பதாக அரசு தரப்பு கூறுவது முஸ்லீம்களை என்று கூறப்படுகிறது. எனவே முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பகுதியில் சொத்துக்களை அவர்கள் மிரட்டி வாங்குவதாகவும் அதை தடுக்கதான், சொத்து பரிமாற்றங்களை கண்காணிப்பதாகவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரெல்லாம் வேறு நாட்டிலிருந்து இங்கே வந்து இந்திய வாக்குரிமையை பெற்றுள்ளார்களோ அவர்கள் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று அரசு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.

மத மோதல்கள்
"உத்தரகண்ட்டில் சில பகுதிகள் அதிக மக்கள்தொகை வளர்ச்சியை கண்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இடம் பெயரும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. எனவே, மத மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது" என்று அரசு கூறியுள்ளது.

எச்சரிக்கை
முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளரும், உள்துறைத் தலைவருமான ஆனந்த் பர்தன், இதுகுறித்து கூறுகையில், "டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அனைத்து 13 எஸ்பிக்களுக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு ஏற்படுவது குறித்த அரசின் கவலைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கடிதத்தில் உள்ள அறிவுறுத்தல்களின்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், அதிகாரிகள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அரசிற்கு தகவல்கள் வழங்க வேண்டும். இதற்கு முன், முதல்வர் பெற்ற சில குறிப்பிட்ட புகார்கள் குறித்து டிஜிபியிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆனந்த் பர்தன் தெரிவித்தார்.

வலதுசாரி அமைப்பு போராட்டம்
வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரும், உத்தராகண்ட் ரக்ஷா அபியான் என்ற அமைப்பின் தலைவருமான தர்ஷன் பாரதி கூறுகையில், எங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவியல் அமைப்பே மாற்றப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக புதிதாக பல மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அதுவும் அரசு நிலத்தில் கட்டப்படுகின்றன. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். லவ் ஜிகாத் எனப்படும் காதலை பயன்படுத்தி மதம் மாற்றுவதற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரே உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டேன். அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நம்பிக்கையை தருகின்றன. ஆனால் உண்மையிலேயே களத்தில் மாற்றம் நிகழுமா என்பதைப் பொறுத்துதான் இதன் வெற்றி, தோல்வி உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேபாள எல்லை மாநிலம்
உத்தரகண்ட் மூத்த பாஜக தலைவரும், அரசின், முன்னாள் ஊடக ஆலோசகருமான அஜேந்திர அஜய், கூறுகையில், ஆகஸ்ட் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் "சட்டவிரோத மசூதிகள் கட்டுவதை" தடுக்கும்படி முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். உத்தரகண்ட் மாநிலத்தில் குறிப்பாக மலைப்பகுதிகளில் சட்ட விரோதமாக மசூதிகள் கட்டப்படுகின்றன. நேபாள எல்லையில் உள்ள பிதோராகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இதுபோன்ற சில உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், சமீபத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒரு மசூதியை மாவட்ட நிர்வாகம் இடித்தது. மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மொத்தமாக நிலம் வாங்குவதை ஊக்கப்படுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும். உத்தரகாண்ட் மாநிலம் இரண்டு நாட்டு சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்துள்ளதால் இது முக்கியமானது என்றார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதேநேரம், பாஜக மக்கள் தொகை பிரச்சினையை வகுப்புவாதமாக்க முயற்சிக்கிறது என்றும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்து-முஸ்லீம் இரு துருவ அரசியலை பாஜக அரசு ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உத்தரகாண்ட் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ ப்ரீதம் சிங், கூறுகையில், "தேர்தலின் போது இந்து-முஸ்லீம் இரு துருவ அரசியலை உருவாக்குவதற்கான பாஜக அரசின் சூழ்ச்சி இதுவாகும். உத்தரகாண்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் உத்தரகாண்டின் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அரசு கூறுகிறது. இந்த வெளியாட்கள் யார், இந்த மக்கள்தொகை மாற்றங்கள் எங்கு நிகழ்ந்தன என்பதை அரசாங்கம் சொல்ல வேண்டும். அவர்கள் வெளிநாட்டு பிரஜைகளா? அப்படியானால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் காலம்
தேர்தல் நெருங்கும் போது பாஜக அரசு ஒரு சமூகத்தை குறிவைக்கிறது, மேலும் மக்களிடம் தங்கள் ஆட்சியின் சாதனைகளை பாஜகவால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் எதையும் செய்யவில்லை. எனவே மத பிரச்சினையை கிளப்புகிறார்கள். இந்த பிரச்சினையை எழுப்ப அவர்களுக்கு நான்கரை வருடங்கள் ஆகியுள்ளதே ஏன்? இவ்வாறு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications