வாயை மூடி பேசவும்..! வம்பை விலை கொடுத்து வாங்கிய நுபுர்! சர்ச்சை ‘தலை’களுக்கு வாய்பூட்டு போட்ட பாஜக!
டெல்லி : நபிகள் நாயகம் பற்றிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் கருத்துக்களால் பாஜகவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி மற்றும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பேச புதிய கட்டுப்பாடுகளை பாஜக தலைமை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
அதனையடுத்து தொழிலதிபர் நவீன் குமார் ஜிண்டாலும் அதேபோன்றதொரு சர்ச்சைக் கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு பின்னர் நீக்கினர். இந்த இரண்டு விஷயங்களையும் கண்டித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கண்டன ஊர்வலம் நடந்தது.

நுபுர் சர்மா சர்ச்சை
அந்த ஊர்வலம் கல்வீசு வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டனர். இந்த நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், யுஏஇ உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் தூதர்களை அழைத்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்ததோடு, நுபுர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.

புதிய கட்டுப்பாடுகள்
இந்நிலையில் நுபுர் சர்மா நேற்று தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து இன்று அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தாலும் அவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக மும்பை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பேச புதிய கட்டுப்பாடுகளை பாஜக தலைமை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மீடியா செல்
நபிகள் நாயகம் பற்றிய நுபுர் சர்மாவின் கருத்துக்களால் பாஜக மிகப்பெரிய சர்வதேச பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில் தான் பாஜக இந்த முடிவை அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. யார் யார் பேச வேண்டும் என்பதை பாஜக மீடியா செல் மட்டும் உறுதி செய்யும்.

விமர்சனம் வேண்டாம்
எந்தவொரு மதத்தையோ, அதன் சின்னங்களையோ குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட பிரமுகர்களை விமர்சிக்க வேண்டாம் என்று செய்தித் தொடர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரசாரமான விவாதங்களின் போது பாஜக உறுப்பினர்கள் எல்லையை கடக்கக் கூடாது எனவும், அவர்கள் தங்கள் பேச்சினைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், கோபமடையவோ வேண்டாம் என்றும் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன.
Recommended Video

கட்சியினருக்கு அறிவுறுத்தல்
தொலைக்காட்சி விவாதத்தின் தலைப்பை முதலில் சரிபார்த்து, அதற்குத் தயாராகி, எந்தச் சேனலிலும் பேசுவதற்கு முன், அது குறித்த கட்சியின் கொள்கைகளை நன்கு தெரிந்து கொண்டு பேசுமாறும், நெறியாளர்கள் கோபப்படுத்தும் கேள்வியை கேட்டாலோ அல்லது நடந்து கொண்டாலோ செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்த வலையிலும் விழக்கூடாது என்றும், அரசின் சமூக நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் பாஜக தனது செய்தித் தொடர்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது என நம்பந்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications