பட்ஜெட் 2022: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறையுமா? எதிர்பார்ப்பு
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் நகைக்கடை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி: தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் நகைக்கடை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மீதான வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் துறைமுக வசதிகள், விமான நிலையங்கள், ரயில்வே உள்ளிட்ட மண்டலங்களை உருவாக்கவும் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள் மட்டுமின்றி அனைத்துத் துறையினரும் நம்பிக்கையுடன் உள்ளனர். கோவிட் நெருக்கடிக்கு மத்தியில், இம்முறை ஏதாவது ஒன்று வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பட்ஜெட் தாக்கலுக்கு நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால், அதுபற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், 2025ஆம் ஆண்டுக்குள் ரூ.375 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக நிதி சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இதுதவிர, கார்ப்பரேட் நிறுவனங்களும், வருமான வரி செலுத்தும் தனிநபர்களும் சலுகைகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உதாரணமாக, 80சி பிரிவின்கீழ், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரிக்கழிவு அளிக்கப்படுகிறது. இந்த தொகையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று மாத சம்பளதாரர்கள் விரும்புகிறார்கள்.
ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு அதிகபட்ச வரியான 30 சதவீதம் விதிக்கப்படுகிறது. இந்த ரூ.15 லட்சம் வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியின் ஆதிக்கம் பெருகி வருகிறது. அதனால் அதற்கு வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறவில்லை. அதனால், இந்தியர்கள் பட்டியலிட்ட சம பங்குகளின் விற்பனைக்கு மட்டும் நீண்ட கால ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கும், சமுதாயத்துக்கும் செலவிட்ட தொகைக்கு வரிக்கழிவு அளிக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு கம்பெனி வரி 15 சதவிகிதம் அல்லது அதற்கும் கீழாக குறைக்கப்படும் என்று தெரிகிறது.
மறைமுக வரிகளை பொறுத்தவரை, மரபுசாரா எரிசக்தி உற்பத்தி சாதனங்கள் மற்றும் அவை தொடர்புடைய உதிரிபாகங்களுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என்று தெரிகிறது. செமி கண்டக்டர்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அதற்கும் சலுகைகள் அறிவிக்கப்படும். தோல், லேமினேட் போன்ற துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படக்கூடும்.
கடந்த பட்ஜெட்டில் 400 பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் மேலும் பல பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக பண புழக்கத்தையும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் புரிய உகந்த சூழ்நிலையையும் உருவாக்கக்கூடிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
80சி கீழ் சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல கோணங்களில் இருந்து வருகிறது. ரூ.10 லட்சத்துக்கும் மேலான தொகைக்கு தற்போது உள்ள 30 சதவீத வரியை 25 சதவிகிதமாகக் குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், 10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் மட்டுமே வரி என்று கூறப்பட்டாலும், கல்வி வரி, கூடுதல் கட்டணம் சேர்க்கும் போது, பலர் 42 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. எனவே 30 சதவீத வரியில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டால் இந்த ஸ்லாப்பில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.












Click it and Unblock the Notifications