இதப்பாருங்க.. ரெம்டெசிவிர் உற்பத்தி தேவையைவிட கூடிப்போச்சு! மாநில ஒதுக்கீடை ரத்து செய்த மத்திய அரசு
டெல்லி: ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தேவையை விட அதிகரித்துள்ளதால், மாநில அரசுகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக்குவதை நிறுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நாடு முழுக்க கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 1.73 லட்சம் கொரோனா நோய் தொற்று பதிவு செய்யப்பட்டது. 45 நாட்களில் இதுதான் குறைவான அளவாகும்.
இந்த நிலையில், நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மந்தாவியா தெரிவித்துள்ளார்.

அதிக வினியோகம்
அவர் இன்று அளித்த பேட்டியில், ஏப்ரல் மாதம் தினசரி உற்பத்தி 33 ஆயிரம் குப்பிகளாக இருந்த நிலையில், தற்போது தினசரி உற்பத்தி மூன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லிருந்து 60 ஆக உயர்ந்ததால், தற்போது தேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் விநியோகம் உள்ளதாகவும் கூறினார்.

மாநிலங்களுக்கு சப்ளை இல்லை
நோயாளிகளுக்கான தேவையை விட, ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மாநிலங்களுக்கு வழங்கி வந்த ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரெம்டெசிவர் மருந்து நிலைப்புத் தன்மையை உறுதி செய்ய, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்புக்கும் உத்தரவிட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருந்து வாங்க கூட்டம்
ஒரு வாரத்திற்கு முன்புவரை கூட ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தேவை அதிகமாக இருந்தது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை பார்த்த, தமிழக அரசு சென்னை தவிர்த்து மேலும் சில மாநகராட்சிகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்க ஏற்பாடு செய்தது. இன்னொரு பக்கம், கள்ளச் சந்தையில், ஒரு குப்பி ரெம்டெசிவிர் 21 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் ஒரு குப்பி ரூ.1545 என்ற அளவுக்குத்தான் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத் தனமாக ஸ்டாக் வைத்தவர்களை போலீசார் கைது செய்ய ஆரம்பித்தனர்.

பலன் கொடுத்த ரெம்டெசிவிர்
இப்படி பல பரபரப்புகளை ஏற்படுத்திய ரெம்டெசிவிர் இப்போது தேவைக்கு அதிகமாவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே பதுக்கி வைத்தவர்கள் நிலைமை இப்போது பரிதாபமாகிவிட்டது என்று சொல்லலாம். ரெம்டெசிவிர் ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும். அனைவருக்குமே இது பலனளிக்குமா என்று தெரியாது. ஆனால் சரியான வயதுடையோருக்கு, சரியான நேரத்தில் ரெம்டெசிவிர் கொடுப்பது பலன் தந்தது என்பதுதான் மருத்துவர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications