சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பிரத்யேக கவச வாகனம்.. இத்தனை பாதுகாப்பு அம்சங்களா? வியக்க வைத்த கார்
டெல்லி: டெல்லியில் தொடங்கி நடந்து வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உலகின் முன்னணி தலைவர்கள் வந்து இருப்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக அவரது பிரத்யேக வாகனம் Hongqi N701- என்ற பிரத்யேக சொகுசு லிமோசின் கார் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் அதிபருக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பது பற்றி இங்கு காணலாம்.
பிரிக்ஸ் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. பிரிக்ஸ் மாநாட்டின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இந்தக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் இதர கூட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரத்யேக கவச வாகனம்
இந்த மாநாட்டில் பங்கேற்க நேற்றே ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியான் ஆகியோர் வந்தனர். உலகின் முன்னணி தலைவர்கள் டெல்லியில் குவிந்து இருப்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின் பிங் இன்று நண்பகலில் டெல்லி வந்தார். கல்வான் தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தாராத நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
சீன அதிபர் ஜின் பிங்கிற்காக அவரது பிரத்யேக வாகனம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீன அதிபரை பொறுத்தவரை Hongqi N701- என்ற பிரத்யேக சொகுசு லிமோசின் காரில்தான் பயணம் செய்கிறார். அமெரிக்க அதிபர் வருகைக்கு முன்பாக பீஸ்ட் கார்கள் எப்படி அவர் செல்ல இருக்கும் நாட்டிற்கு கொண்டு வரப்படுமோ அதேபோல, சீன அதிபர் சென்றாலும் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.
வெடிகுண்டு தாக்குதலையும் தாங்கும்
இந்த கார் சீனாவின் அதிபர் பயணிப்பதற்கு என்றே பிரத்யேக பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 21 இன்ச் புல்லெட் புரூப் சக்கரங்கள், குண்டு துளைக்காத கண்ணாடிகள் மற்றும் வெளிப்புற கவசத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாம். வெடிகுண்டுகளின் தாக்குதலையும் தாங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரசாயனத் தாக்குதல்கள் ஏதேனும் நடைபெற்றாலும் அதில் இருந்து பாதுகாக்க பிரத்யேக காற்றழுத்த அமைப்பு காரில் உள்ளது. முக்கியமான கட்டளைகளை பிறப்பிக்க வேண்டும் என்றால் காரில் இருந்தபடியே தொடர்பு கொள்ள நவீன தொலைத்தொடர்பு வசதிகள் காரில் உள்ளன. 5.5 மீட்டர் அதாவது 18 அடி நீளம் கொண்டதாக இந்த கார் உள்ளது.


Click it and Unblock the Notifications
