நீதித்துறையின் “ஹாட்ஸ்பாட்”.. கை வைத்த கிரண் ரிஜிஜு! சட்டத்துறையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது ஏன்?
டெல்லி: மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சராக மாற்றப்பட்டு, சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சட்டத்துறையில் இருந்து கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டதன் பின்னணியில் உச்சநீதிமன்ற கொலீஜியம் குறித்த அவரது விமர்சனமும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கிரண் ரிஜிஜு. அதன் பின்னர் சிறுபான்மை நலத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சட்டத்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.

மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றத்தில் இருந்தே கிரண் ரிஜிஜுவுக்கும், இந்த நீதித்துறையின் தலைமை பீடமாக கருதப்படும் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கும் இடையே ஏழாம் பொறுத்தமாக உள்ளது. பல்வேறு கட்டங்களில் உச்சநீதிமன்ற நடைமுறைகள் மற்றும் கொலீஜியம் முறைக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்து உள்ளார்.
கொலீயம் என்பது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகளை கொண்ட குழுவாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைகளை இந்த குழுவே வழங்கி வருகிறது. இப்படி உச்சபட்ச அதிகாரம் படைத்த கொலீஜியத்தை வெளிப்படைத் தன்மையற்ற அமைப்பு என்று விமர்சித்தார் கிரண் ரிஜிஜு.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கிரண் ரிஜிஜு, "நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் முறை என்பது வெளிப்படைத் தன்மையற்றதாகவும், கேள்வி கேட்க இயலாத வகையிலும் உள்ளது. இதையே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் சொல்கிறார்கள். சர்வதேச அளவில் நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்வது இல்லை. இந்தியாவில் அது நடக்கிறது.
நீதிபதிகள் தேர்வு முறையில் நிறைய அரசியல் நடைபெறுகிறது. நீதிபதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் ஒன்றும் இயந்திரங்கள் கிடையாது. ஒவ்வொரு ஜாமீன் மனுவும் உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம் ஏன் ஜாமீன் மனுவை விசாரிக்கிறது? எங்கள் வேலையை உச்சநீதிமன்றம் செய்யக்கூடாது.
இதுபோன்ற சவால்களை சமாளிக்கும் இடத்தில்தான் அரசு உள்ளது. நான் எங்காவது நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட்டு உள்ளேனா? இல்லை. நீதித்துறையே எங்கு சாலை அமைக்க வேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுத்தால் அரசாங்கம் எதற்கு?" என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக பல தருணங்களில் கொலீஜியத்தின் செயல்பாடுகளில் கிரண் ரிஜிஜுவில் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கேஎம் ஜோசப் நியமனத்திற்கும் மத்திய சட்டத்துறை எதிர்ப்பு தெரிவித்ததாக பேசப்படுகிறது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதரை கொலீஜியம் பரிந்துரைத்தும் அவர் நியமிக்கப்படாததன் பின்னணியில் கிரண் ரிஜிஜுவே உல்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அனைத்திற்கு மேலாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேச விரோத சக்திகளுடன் இருப்பதாக கிரண் ரிஜிஜு பேசியது தேசிய அளவில் விவாத பொருளாக மாறியது. கிரண் ரிஜிஜுவின் இத்தகைய கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே சில சமயங்களில் நேரடியாக பதலடியும் கொடுத்து உள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "கொலீஜியம் நாம் உருவாக்கியதிலேயே சிறந்த அமைப்பு. இதன் நோக்கம் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதாகும். நீதித்துறை சுதந்திரமாக செயல்பட, இதர தாக்கங்களில் இருந்து அதை பாதுகாக்க வேண்டும். சட்ட அமைச்சருடன் இது தொடர்பாக பிரச்சனை செய்ய விரும்பவில்லை." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications