வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற காங்கிரஸ் எம்பி!
டெல்லி: பல்வேறு எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி முகமது ஜாவீத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. "வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்காகவும், நிர்வாகத்தை சீர் செய்வதற்காகவும் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது." என்று மத்திய பாஜக அரசு கூறியது.

மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு சிறுபான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வக்பு சட்ட திருத்தத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக இன்று போராட்டம் நடத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தாமாக மட்டுமே ஆதரவாக வாக்கு அளித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசமைப்பு மீதான தாக்குதல். இதற்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்." என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி முகமது ஜாவீத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். "இது முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் பிரிவினைவாத தாக்குதல்." என்றும் அவர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் முகமது ஜாவீத்.
இவர் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்த மசோதா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. அரசியலமைப்பு பிரிவு 14 (சம உரிமை), பிரிவு 25 (மதம் பின்பற்றுவதற்கான சுதந்திரம்), பிரிவு 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), பிரிவு 29 (சிறுபான்மை மக்கள் உரிமை), 300A (சொத்துரிமை) ஆகியவற்றுக்கு எதிரானது.
சட்ட திருத்தம் மூலம் இதுவரை வழக்கத்தில் இல்லாத கட்டுப்பாடுகளை விதித்து முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. இந்து மற்றும் சீக்கிய அறக்கட்டளைகள் சுதந்திரமாக செயல்படும் நிலையில், வக்பு விவகாரங்களில் மட்டும் அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. இதன் மூலம் இஸ்லாம் மார்கத்துக்கு சேவை செய்ய சொத்துகளை அர்ப்பணிக்க வருவோர் பின்வாங்கும் நிலை ஏற்படும்.
இந்த சட்ட திருத்தப்படி வக்பு அறக்கட்டளையில் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சிறுபான்மை மக்களின் மத நிர்வாக உரிமையில் தலையிடுவதுடன் இந்து நிறுவனங்களுடன் முரண்படுவதற்கு வழி வகுக்கும்." என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. முகமது ஜாவீத் மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications