ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கீடு.. பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா நிர்மலாவின் பட்ஜெட்?
ரயில்வேக்கு 2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டெல்லி: 2023-2024 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ரயில்வே துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கிடையாது. பொது பட்ஜெட்டுடன் இணைந்தே ரயில்வே நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. குடியரசு தலைவர் உரையை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது.
நடப்பு நிதி ஆண்டில் பொருளாதர வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இன்று பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.

ரயில்வே நிதி நிலை அறிக்கை
நடப்பு ஆண்டில் கர்நாடகா, ராஜஸ்தான் உள்பட 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ரயில்வேக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டுடன் இணைந்தே ரயில்வே நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

அதிவேக ரயில்களை இயக்குதல்
அந்த வகையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ரயில்வே துறை குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக ரயில்வேயை பொறுத்தவரை முடிவு பெறாமல் இருக்கும் திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அதிவேக ரயில்களை அதிகமாக இயக்குவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்துதல் போன்றவை பற்றிய அறிவிப்புகள் இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

புல்லட் ரயில்வே திட்டம்
புதிய தண்டவாளங்கள் அமைப்பது, வந்தே பாரத் ரயில் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஹைட்ரஜன் சக்தியில் இயங்கக்கூடிய ரயில்களை அறிமுகம் செய்து அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் ஆகியவை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறைக்கு என 1.8 லட்சம் கோடி ஒதுக்கப்படலாம் என ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த நிதி ஆண்டில் 1.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு
ஆனால், ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14 நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதை விட 9 மடங்கு அதிமான தொகை ஒதுக்கப்பட்டது. ரயில்வே துறைக்கான நிதி இதுவரை இலலாத அளவுக்கு உயர்த்தப்பட்டாலும் ரயில்வேயில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பயணிகள் மத்தியில் இருந்தது. எனினும் அது குறித்த எந்த அறிவிப்பும் இன்றைய பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications