'ஊழலும்-வாரிசு அரசியலும் மிகப்பெரும் சவால்' மோடியின் பேச்சுக்கு ராகுல் காந்தியின் பதில் இது தான்!
டெல்லி: ''ஊழலும், வாரிசு அரசியலும் தான் மிகப்பெரும் சவால் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், இது குறித்து பதில் அளிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறுத்து விட்டார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சுதந்திரத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியயை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
சூப்பர்.. 1 லட்சம் அடிக்கு மேலே.. மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'!

ஊழலும், வாரிசு அரசியலும்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து பேசிய பிரதமர் மோடி, சுதந்திர காற்றை தேசம் சுவாசிக்க அவர்கள் பட்ட அரும்பாடுகளை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் குறித்தும் பேசிய பிரதமர் மோடி, ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள் என்றார்.

முழுவேகத்தோடு முன்னேற முடியாது
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டை அரிக்கும் கரையானாக ஊழல் உள்ளது. ஊழலை ஒழிக்காமல் நம்மால் முழுவேகத்தோடு முன்னேற முடியாது. அதேபோல நம்முன் மற்றொரு மிகப்பெரிய சவாலும் உள்ளது. அது நெபோடிசம் எனப்படும் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை, முன்னிரிமையே ஆகும். குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் சிபாரிசுகள் அளிக்கப்படுவது மிகப்பெரிய தீங்காகும். இத்தகைய போக்கு உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பை பறிக்கும். இது ஊழலுக்கும் வழிவகுக்கிறது.

நான் கருத்து கூற மாட்டேன்
தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே நமது தேசம் வளர்ச்சி அடையும். எனவே, நாட்டை காப்பாற்ற இந்த விவகாரத்தில் சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டும். குடும்ப நலனுக்கும் தேச நலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இந்திய அரசியலில் இருந்தும் அமைப்புகளில் இருந்தும் வாரிசு அரசியல் என்ற பிடியை அகற்றுவோம்" எனப்பேசியிருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல், "இந்த விவகாரங்களில் நான் கருத்து கூற மாட்டேன். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்" எனக்கூறிவிட்டு சென்றார்.

மரியாதைக்குரிய வணக்கம்
முன்னதாக இன்று காலை நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில், "இந்தியா, நாங்கள் மிகவும் நேசிக்கும் தாய்மண், பழமையானது, நிரந்தரமானது, எப்போதும் புதுமையுடன் இருக்கக்கூடியது. இத்தகைய இந்தியாவுக்கு நாங்கள் மரியாதைக்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறோம். பாரததாயின் சேவையில் எப்போதும் புதிதாக இணைந்திருப்போம். அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள்.. ஜெய்ஹிந்த் ! #75வது சுதந்திர தினம்" என பதிவிட்டு இருந்தார்.

‘ஆசாதி கவுரவ் யாத்திரை’ என்ற பேரணி
முன்னதாக இன்று காலை காங்கிரஸ் கட்சி சார்பில் 'ஆசாதி கவுரவ் யாத்திரை' என்ற பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி காந்தி நினைவிடத்தில் முடியும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , குலாம் நபி ஆசாத், அம்பிகாசோனி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூவர்ண கொடியை கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.