“நம்ம குறி அதுதான்.. பிரச்சனை பண்ணாதீங்க” - அமித்ஷா கொடுத்த சிக்னல்.. என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?
டெல்லி : எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024 தேர்தல் பற்றியும், அதிமுக விவகாரம் பற்றியும் சில முக்கிய அறிவுரைகளைக் கூறியதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதிமுகவில் நிலவும் மோதலுக்கு மத்தியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே டெல்லியின் ஆதரவைப் பெற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். எடப்பாடி பழனிசாமி சில கோரிக்கைகளை முன்வைத்ததோடு, ஃபைல்களையும் அமித்ஷாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதிமுக விவகாரத்தில் தனது விருப்பத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்ன அமித்ஷா, ஓபிஎஸ் உடன் இணைய வேண்டும் என்றே வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேகம் காட்டும் ஈபிஎஸ்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது, தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்பது என வேகமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமித்ஷா மீட்டிங்
இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். எடப்பாடி பழனிசாமி பலமுறை டெல்லி மேலிட தலைவர்களை சந்திக்க முயன்றும் மோடி, அமித்ஷா ஆகியோர் சந்திப்பை தவிர்த்து வந்த நிலையில் திடீரென நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது.

ஈபிஎஸ் டெல்லி பயண பின்னணி
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் ரெய்டுகள் காலைச் சுற்றி வரும் நிலையில், தொடர்ந்து டெல்லி ஆதரவு வேண்டி வந்தார் ஈபிஎஸ். இந்நிலையில் தான், பொதுக்குழு வழக்கு தீர்ப்பும் எடப்பாடிக்கு சாதகமாக வந்த நிலையில், மீண்டும் பல்வேறு காய்நகர்த்தல்களைச் செய்து அமித்ஷாவின் அப்பாயின்மெண்ட்டை பெற்றார். வழக்குகள், அதிமுக விவகாரம், ஆளும் திமுக அரசு மீதான புகார்கள் என 3 முக்கியமான விஷயங்கள் ஈபிஎஸ் - அமித்ஷா சந்திப்புக்குப் பின்னே ஒளிந்திருந்தன.

தினகரன் ஓட்டை பிரிக்கிறார்
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது ஈபிஎஸ் இந்த 3 விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும், அமித்ஷா 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தே அதிகம் பேசியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியில் குழப்பம் நிலவுவது நல்லதல்ல, ஏற்கனவே டிடிவி தினகரன் கடந்த தேர்தல்களில் அதிமுக வாக்குகளைப் பிரித்துள்ளார். இனியும் அது தொடர்ந்தால் சிக்கல் தான் என அமித்ஷா ஈபிஎஸ்-க்கு அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் தான் குறியா இருக்கணும்
2024 தேர்தலில் சிறிய கட்சிகளைக் கூட விட்டுவிடாமல் ஆதரவைப் பெற வேண்டும். இருக்கும் கூட்டணி கட்சிகளை தவறவிடக்கூடாது. இதுபோன்ற சூழலில் நீங்கள் கட்சியை கண்ட்ரோலில் கொண்டு வரவேண்டும் என நினைத்தால் கட்சிக்கு நல்லது அல்ல, தேர்தலை மனதில் வைத்து செயல்படுங்கள், அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதே உங்கள் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா ஈபிஎஸ்ஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உதவியை எதிர்பார்க்க முடியாது
எங்களுக்கு ஒவ்வொரு தொகுதியும் முக்கியம். அதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் இந்த முறை அதிகமாக வெல்வது அவசியம். நம் கூட்டணி தமிழ்நாட்டில் அதிக இடங்களில் ஜெயித்தால் தான் நீங்கள் பாஜக அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எதையும் கவனிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்தால், எங்களால் உதவ முடியாது என கட் அண்ட் ரைட்டாக அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறாராம்.

மனமாற்றம்?
அமித்ஷாவே எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக இப்படி சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பும் கடுமையாக முட்டிக் கொண்டுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்றும் முடிவை எட்டுவாரா அல்லது பாஜகவை கன்வின்ஸ் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications