சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு: ‛ஜனநாயக படுகொலை’ என மாஸ்க் அணிந்து நாடாளுமன்றம் வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் இருந்து ஒரு வாரம் வரை திமுகவின் 6 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛ஜனநாயக படுகொலை' என எழுதப்பட்ட கருப்பு நிற மாஸ்க் அணிந்து இன்று திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி துவங்கியது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா அவைகள் கூடின.
சபையின் முதல் நாள் முதல் நேற்று வரை சமையல் எரிவாயு விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவை பற்றி சபையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

லோக்சபா எம்பிக்கள் இடைநீக்கம்
இதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரு சபைகளிலும் மையப்பகுதியில் சில உறுப்பினர்கள் வந்து அமளி செய்தனர். இந்நிலையில் சபை நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி லோக்சபாவில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேர் இந்த சீசன் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ராஜ்யசபாவில் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட்
இதேபோல் ராஜ்யசபாவில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பயன்படுத்தினர். மேலும் ராஜ்யசபாவின் துணைத் தலைவரின் கோரிக்கையை ஏற்காமல் சில உறுப்பினர்கள் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி ராஜ்யசபா எம்பிக்கள் 19 பேர் ஒருவார காலத்துக்கு நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்
இதில் திமுகவின் கனிமொழி, எம்எம் அப்துல்லா, எஸ் கல்யாணசுந்தரம், ஆர் கிரிராஜன், என்ஆர் இளங்கோ, எம் சண்முகம் உள்ளிட்டவர்கள் அடங்குவர். இவர்கள் உள்பட மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திரும்ப பெற வலியுறுத்தல்
இந்நிலையில் எம்பிக்கள் இடைநீக்கத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விவாதம் கோரிய எதிர்க்கட்சியினர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தவறானது. இதனால் இதனை திரும்ப பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இருப்பினும் தற்போது வரை சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறவில்லை.

மாஸ்க் மூலம் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு
இந்நிலையில் இன்று திமுக எம்பிக்கள் நூதனமான முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்படி கருப்பு நிறத்திலான மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றம் வந்தனர். அந்த மாஸ்க்கில் Democracy Killed (ஜனநாயக படுகொலை) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது ஜனநாயக படுகொலை என குறிப்பிடும் வகையில் அவர்கள் அந்த மாஸ்க் அணிந்திருந்தனர். திருச்சி சிவா, ராஜேஷ் குமார் உள்ளிட்ட திமுக எம்பிக்கள் இந்த மாஸ்க் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Recommended Video

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலில் ஈடுபடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


Click it and Unblock the Notifications
