இந்தியாவில் திருமணத்தை மீறி உறவில் உள்ள ஆண்கள்/பெண்கள் எத்தனை பேர் தெரியுமா? வெளியான ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் 48% பெண்கள் திருமணம் மீறிய உறவை கொண்டுள்ளதாக டேட்டிங் ஆப் ஒன்று சர்வே வெளியிட்டிருக்கிறது. இந்த ஆப் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பயனர்களை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 5 லட்சம் பயனர்களை கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆண்டின் இறுதியான இக்காலகட்டத்தில் பெண்கள் ஏன் கணவர்களை ஏமாற்றி வேறு ஒருவரிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இந்த ஆப் பதில் காண முயன்றது.
இதற்கான பதிலையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களில் 34-49 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் சுமார் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர்.

எத்தனை பேர்?
இந்நிலையில் இதில் 77 சதவிகித பெண்களுக்கு திருமணத்தில் ஆர்வமில்லை என்று கூறியுள்ளனர். கணவர்கள் வீட்டு வேலைகளிலும் இதர பணிகளிலும் தங்களுடன் ஒத்துழைக்காததே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே வீட்டில் கரடுமுரடாக நடந்துகொள்வதாகவும் கூறியுள்ளனர். இதைவிட ஒருபடி மேலே போய் 10ல் 7 பெண்கள் தங்கள் கணவர்களை மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர். மும்பை, டெல்லி, கல்கத்தா பொன்ற பெரு நகரங்களில் கணவர்களை மிரட்டும் பெண்கள் அதிக அளவில் இருப்பதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் கணவன்மார்கள் வீட்டில் பெண்களின் வேலையை பகிர்ந்துகொள்ளாததால் ஏற்படும் மன உளைச்சலை ஈடு செய்ய இதுபோன்ற டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி மூன்றாம் நபர்களை நாடுவதாகவும் கூறியுள்ளனர்.

ஏன்?
34-49 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் கணவனை தவிர வேறு ஒரு ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஒருபுறம் எனில் மறுபுறம் ஆண்களும் இதே அளவில் மனைவியை தவிர்த்து மற்றொரு பெண்ணை தேடி செல்வதும் தெரிய வந்துள்ளது. நாள்தோறும் வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டு சலித்துவிட்டதாகவும் எனவேதான் வேறு ஒரு பெண்ணை தேடி செல்வதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவதில்லை என்பதையும் இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆய்வுகள்
ஆக மொத்தமாக 5 லட்சம் பயனர்களில் 20 சதவிகித ஆண்களும், 13 சதவிகித பெண்களும் திருமணத்தை மீறிய உறவை விரும்புகின்றனர். திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து நீண்ட நெடும் விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது என்று சமூக செயற்பாட்டாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஆணாதிக்க கலாச்சாரம் ஆண்களிடையே இருப்பதை காட்டிலும் பெண்களிடத்தில் குறிப்பாக மாமியார், நாத்தானார் போன்ற பெண்களிடத்தில்தான் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் தெரியப்படுத்தி இருப்பதை இந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாற்றம்
ஆணாதிக்க கலாச்சாரம் இருக்கும் இடங்களில் இயல்பாக பெண்கள் சுரண்டப்படுவார்கள் என்றும், எனவே இதனை தவிர்த்தால் மட்டும்தான் திருமணத்தை மீறிய உறவு முறையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கான மாற்றங்கள் குழந்தை பருவத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். உதாரணமாக பெண் குழந்தைகளுக்கு சமையல் பாத்திர பொம்மைகளையும், ஆண் குழந்தைகளுக்கு கார் பொம்மைகளையும் வாங்கி கொடுப்பதிலிருந்து அந்த ஆண் குழந்தை தனக்கு சமையலில் பங்கு இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறது. அதேபோல சமையலறையில் ஆண் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற போக்குகள் இன்னமும் நம் குடும்பத்தில் நீடித்து வருகின்றன. இவற்றை மாற்றாமல் இந்த பிரச்னைகளை சரி செய்ய முடியாது என்று உளவியல் நிபுணர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications