சுகாதாரமற்ற முறையில் பீட்சா தயாரிப்பு.. ஷாக்கான நெட்டிசன்கள்.. டொமினோஸ் அளித்த விளக்கம்!
டெல்லி: தரத்துக்கு பெயர் போன டொமினோசில் சுகாதாரமற்ற முறையில் பீட்சா தயாரிக்கப்படும் நிகழ்வு நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இத்தாலிய உணவு வகை என்று சொல்லப்படும் பீட்சா இன்று இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்துவிட்டது.
குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் உணவு வகையாக பீட்சா இருப்பதால், இந்தியாவில் இதன் விற்பனை சக்கை போடு போடுகிறது. இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் சில இங்கு கடையை விரித்து பீட்சா விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.
5 கட்சி அமாவாசை.. மதுரை சரவணனை விமர்சித்த எச் ராஜா.. டாக்டர் முதலில் இருந்த கட்சி எது தெரியுமா?

தரத்தில் எந்த குறையும் இருக்காது
ஆர்டரின் பேரில் வீட்டுக்கு உணவு விநியோக நிறுவனங்களால் இத்தகைய பீட்சாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், பீட்சா விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டொமினோஸ். இந்த நிறுவனத்தை தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு டொமினோஸ் பீட்சா இந்தியாவில் ஏகத்துக்கும் பிரபலமாக உள்ளது. இந்தியா முழுவதும் தனது கடையை விரித்துள்ள டொமினோஸ் உணவு விடுதிக்கு பலரும் சென்றிருப்போம்.
இதுபோன்ற பிரபலமான ரெஸ்டாரண்ட்களில் தரத்தில் எந்த குறையும் இருக்காது என்ற நம்பிக்கையில் விலை கூடுதலாக இருந்தாலும் அதைப் பற்றி கவலையின்றி சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டு இருப்போம்.

ஏற்றுக்கொள்ள முடியாத செயல்
ஆனால், இந்த எண்ணம் தவறானதோ? என்று சொல்லும் அளவுக்கு பெங்களூரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சஹில் கர்னனி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீட்சா தயாரிக்க வைத்திருக்கும் மாவுக்கு மேலே தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் மாப் தொங்கிக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள கேப்ஷனில், 'டொமினோஸ் நிறுவனம் நமக்கு இப்படித்தான் சுகாதாரமான பீட்சாவை வழங்குகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்' என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு, இனிமேல் டொமினோசில் சாப்பிட மாட்டேன் என்று பதிவிட்டனர். இருந்தாலும் சில நெட்டிசன்கள், டொமினோசில் வழக்கமாக சுத்தமாகவே உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த கிளையில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே இதற்கு பொறுப்பாகும். ஒட்டுமொத்த டொமினோசையும் குறைகூற கூடாது என்று கூறியுள்ளனர். இன்னொரு நெட்டிசன் கூறும் போது, "பெங்களூருவில் உள்ள டொமினோசில் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. எனக்கும் இதே போன்ற மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.

வீடியோ பதிவிட்டார்
முதலில் இந்த பதிவை வெளியிட்ட கர்னனி, சிறிது நேரத்தில் டொமினோஸ் கிட்சனின் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். உணவு விடுதியில் ஆர்டர் செய்து விட்டு பீட்சாவை வாங்குவதற்காக காத்திருந்த போது இந்த புகைப்படங்களை எடுத்ததாகவும், அங்கு இருந்த சுகாதாரமற்ற சூழல் அதிர்ச்சி அளித்ததால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகவும் கூறினார். டொமினோஸ் கிளையில் சில ஊழியர்களே இருந்ததால், அவர்களிடம் இது குறித்து நான் கேட்கவில்லை என்றும் கர்னனி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த விவகாரம் குறித்து டொமினோஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், 'உணவு சுகாதாரத்தை உறுதி செய்ய தங்கள் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த நெறிமுறைகளை பின்பற்றுகிறது. இதுபோன்ற விதிகளை மீறும் பட்சத்தில் நாங்கள் சகித்துக்கொள்ளவே மாட்டோம். இந்த சம்பவம் தற்போதுதான் எங்கள் கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.