ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த பதில்.. விடாமல் அட்டாக் மோடில் ராகுல்!
டெல்லி: மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகும் என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு கேள்விக் கணைகளைத் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மேலும் இந்த முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மகாராஷ்டிர தேர்தல் முறைகேடுகளை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி அது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் கட்டுரையும் எழுதியுள்ளார். அதில் மகாராஷ்டிர தேர்தலில் நடந்த முறைகேடுகளை 5 வழிகளாக வகைப்படுத்தி பட்டியலிட்டு இருந்தார்.
தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழுவைத் திரட்டுதல், பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரித்தல், பாஜக வெற்றி பெற வேண்டிய இடத்தில் போலி வாக்குகளை குறிவைத்தல், ஆதாரங்களை மறைத்தல் என்ற ஐந்து படிநிலைகளில் மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும், இது அடுத்து வரவுள்ள பீகார் தேர்தலிலும் இது நடக்கும் என்றும் ராகுல் காந்தி கூறி இருந்தார்.
ஆனால் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது. மகாராஷ்டிர தேர்தலில் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு கிடைத்ததால் தேர்தல் ஆணையத்தை அவமதிப்பது அபத்தமானது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் கட்டுரையில் அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், தவறான தகவல்களைப் பரப்புவது தேர்தல்களின்போது அயராது பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை அவமதிப்பதாக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வொரு தேர்தல் செயல்முறையும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறது. அதுவும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவது நாட்டுகே தெரியும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாக்காளர்கள் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்காத தேர்தல்களுக்குப் பின்னர், தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளதாகக் கூறி அவதூறு பரப்ப முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாகாராஷ்டிரா தேர்தல் நடந்த அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பதில் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "தேர்தல் ஆணையம்.. மாகாராஷ்டிரா தேர்தலில் மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், அனைத்து வாக்குச்சாவடிகளின் மாலை 5 மணிக்குப் பிறகான சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள், அதே போல் சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications