டெல்லி சென்ற எடப்பாடி கையில் பெரிய லிஸ்ட்.. மோடி மனதிலிருந்து பன்னீரை தள்ளி வைக்க.. பக்கா ஸ்கெட்ச்!
டெல்லி : டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, கையில் ஓபிஎஸ் பற்றிய புகார் பட்டியலையும், வீடியோ பதிவுகளையும் பிரதமர் மோடியிடம் தெரிவிப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 28ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியுடன் பேசுவதற்காக ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். அதற்கு முன்பாகவே பிரதமரை சந்திக்கும் நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம், கடந்த ஒரு மாதமாக நடந்த நிகழ்வுகளைச் சொல்லி, ஓபிஎஸ் பற்றிய புகார் பட்டியலையே வாசிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

4 நாள் டெல்லி பயணம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அவருக்கு டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் 4 நாட்கள் டெல்லியில் தங்கவிருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பு
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற கையோடு முதல் முறையாக டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் நீதிமன்றத்தை தொடர்ந்து நாடி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கம் அளிப்பார் எடப்பாடி
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, 2024 தேர்தலில் நமது கூட்டணி அதிக இடங்களில் வெல்ல ஒற்றைத் தலைமை அவசியம், ஒற்றைத் தலைமை இல்லாததன் காரணமாகவே திமுக அரசை எதிர்த்து பெரிய அளவில் செயல்பட முடியவில்லை, கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கும், ஒற்றைத் தலைமை இல்லாததே காரணம் என தான் தலைமைப் பதவிக்கு வந்துள்ளது குறித்து விளக்கங்களை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதரவு பட்டியல்
மேலும், அதிமுகவில் தனக்கு இருக்கும் ஆதரவை விரிவாக எடுத்துச் சொல்லி, நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாகவே கட்சியின் நலனுக்காக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் கூறி, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தம் பக்கம் இருப்பதற்கான பட்டியலையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அராஜகம் செய்த ஓபிஎஸ்
மேலும், கட்சியில் குழப்பம் ஏற்படுத்தவும், பிரச்சனைகளை உருவாக்கவும் ஓபிஎஸ் செய்த வேலைகள் பற்றியும் ஒரு லிஸ்ட்டையே தயார் செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. தாங்கள் எவ்வளவோ பேச்சுவார்த்தைக்கு முயன்றும் அதற்கு மதிப்பளிக்காமல், அதிமுகவில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை வைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டதாகவும் சொல்ல இருக்கிறாராம் ஈபிஎஸ்.

லிஸ்ட் ரெடி
வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தபோது அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து, அலுவலகத்தையே சூறையாடியது, முக்கியமான ஆவணங்களை அள்ளிச் சென்றது, அதன் காரணமாக சீல் வைக்கப்பட்டு 10 நாட்களாக யாருமே அங்கு செல்லமுடியாமல், கட்சி முடங்குவதற்கு திமுகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது என ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் பட்டியலாகத் தயார் செய்து எடுத்துச் சென்றுள்ளாராம்.

வீடியோவும் ரெடி
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து எல்லாவற்றையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியது தொடர்பான வீடியோ காட்சிகளையும் பதிவு செய்து எடுத்துச் சென்றுள்ளாராம் ஈபிஎஸ். அதை டெல்லியில் போட்டுக்காட்டி, ஓபிஎஸ்ஸின் அராஜக செயல்களைப் பாருங்கள், ஆனால் நான் அராஜகம் செய்வதாக அவர் சொல்கிறார் என தனக்கு நியாயம் கேட்கத் திட்டமிட்டுள்ளாராம்.

தொடர்ந்து குடைச்சல்
கட்சியில் பெருவாரியான ஆதரவு தனக்கு இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என மாறி மாறிச் சென்று தேவையற்ற சங்கடங்களை உருவாக்கி வருவதாகவும், இதனால், மக்கள் மத்தியில் அதிமுக மீது அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் உருக்கமாக ஈபிஎஸ் பேசுவார் என்று கூறப்படுகிறது.

செல்வாக்கை இழந்துவிட்டார்
ஓ.பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை முழுவதுமாக இழந்துவிட்டதால் அவருக்கு எந்தவகையிலும் பாஜக ஆதரவு அளிக்கக்கூடாது. குழப்பங்கள் தீர்ந்தால் வரும் தேர்தல்களில் பாஜகவோடு அதிமுக இணைந்து செயல்படும்போது அதிக இடங்களைப் பிடிக்க முடியும். எனவே, சென்னை வரும்போது ஓபிஎஸ் உடனான சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வலியுறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

மோடியின் குட்புக்கில் இருந்து
ஓபிஎஸ் மீதான புகார்களை அடுக்கி, மோடியின் குட்புக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை அகற்றுவதுதான் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கான முக்கிய நோக்கமே என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டதாக மோடி பெயரை பகிரங்கமாகவே ஓபிஎஸ் வெளியில் சொன்னது மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈபிஎஸ் சொல்லப்போகும் புகார்கள் மோடியின் ஆதரவுக் கரத்தை தன் பக்கம் திருப்பும் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications