பணிப் பங்கீடு சர்ச்சை.. அமைச்சரவை செயலருக்கு தேர்தல் ஆணையர்களின் நேரடி கடிதம்.. ஆர்டிஐ மூலம் அம்பலம்
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி இடையில் பணிப் பங்கீடு தொடர்பாக மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் நேரடியாக அமைச்சரவை செயலாளருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக தகவல்கள், தற்போது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையார் ஞானேஷ் குமாருக்கு செயல்பாடுகளுக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபணை தெரிவித்த சம்பவம் நாடு முழுவதும் புயலைக் கிளப்பியது. கடந்த 10 மாதங்களில் மட்டும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பல முக்கிய உத்தரவுகள் தங்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்த ஆட்சேபணை குறிப்புகள் அம்பலமாகியது.

தற்போது ஆர்டிஐ மூலமாக இன்னும் சில விவகாரங்கள் உறுதியாகி இருக்கிறது. ஜூலை 28ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட பணிப் பங்கீடு ஆணை, விதிகளை மீறுவதாகவும், அது தங்களுக்கு தெரியப்படுத்தாமல் அவசரமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் நேரடியாக அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இது ஜூலை 29ஆம் தேதி ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியதால், பின்னர் பணிப் பங்கீடு ஆணை மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆர்டிஐ மூலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்துள்ளன. அதாவது தேர்தல் ஆணையர்கள் இருவரும் அனுப்பிய கடிதங்கள் ஜூலை 30ல் அமைச்சரவை செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்பின் ஆகஸ்ட் 5க்குள் அவை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், அந்த கடிதங்கள் தேர்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகள் தொடர்பானது அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி தொடர்பான பணிப் பங்கீடு குறித்த எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்தல் ஆணையர்கள் எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்பது தொடர்பாக விவரங்கள் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையர்களின் 10 பக்க கடிதங்கள், 2 பக்க பதில்கள் உட்பட அனைத்தையும் ரூ.28 கட்டணம் செலுத்திவிட்டு பெற்றுக் கொள்ள முடியும். இதன்பின் தேர்தல் ஆணையர்கள் எழுதிய கடிதங்களில் என்ன இருந்தது என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
