மன்கிபாத் மோடி உரையின் போது பாத்திரங்களில் ஒலி எழுப்புகள்- புதிய போராட்டங்களை அறிவித்த விவசாயிகள்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ந் தேதி வானொலியில் மன்கிபாத் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது பாத்திரங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பு தெரிவியுங்கள் என டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 25 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் லட்சக்கணக்க்கில் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

20க்கும் அதிகமானோர் மரணம்
பிற மாநில விவசாயிகளும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு, விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயார் என்கிறது. ஆனால் விவசாயிகள் 3 சட்டங்களையும் திரும்பப் பெற்றாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். மேலும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர்.

மோடி உரை புறக்கணிப்பு
இந்த நிலையில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அடுத்த கட்ட போராட்டங்களை இன்று அறிவித்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பாரதீய கிஷான் யூனியன் தலைவர் ஜகத்சிங் தலேவலா கூறியதாவது: வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் மன்கிபாத் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி உரையை புறக்கணிக்கும் வகையில் கொரோனா காலத்தில் பாத்திரங்களில் ஒலி எழுப்பிய போல ஒலி எழுப்ப வேண்டும். ஹரியானா நெடுஞ்சாலைகளில் டிசம்பர் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்தாமல் புறக்கணிக்கும் போராட்டத்தை விவசாயிகள் நடத்துவர். இவ்வாறு தலேவலா கூறினார்.
|
உண்ணாவிரதப் போராட்டம்
ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், டெல்லியில் போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் திங்கள்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் பொதுமக்களும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

டிச.23-ல் விவசாயிகள் தினம்
மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான ராகேஷ் திகெய்த் கூறுகையில், டிசம்பர் 23-ந் தேதி விவசாயிகள் தினம் - கிஷான் திவஸ் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications