வருமான வரி செலுத்துவது இனி ரொம்ப ஈஸி.. அடுத்த வாரம் புதிய மசோதா அறிமுகம்.. பட்ஜெட் உரையில் அறிவிப்பு
டெல்லி: புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும், 63 ஆண்டுகால பழமையான வரி நடைமுறைகள் மாற்றப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வரி விலக்கு வரம்பில் அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளார். அதாவது, 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், வருமானத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட துணிச்சலான வரி சீர்திருத்தங்கள் இந்த பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், அதிகரித்து வரும் அன்றாடச் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் வரிச் சுமைகளுடன், அரசு வரி அழுத்தத்தைக் குறைத்து நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு சாதகமான வரி அடுக்கு தொடர்பான மாற்றங்களை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிதாக நேரடி வரி குறியீடு அதாவது Direct Tax Code என்ற பெயரில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய வருமான வரி மசோதா - அடுத்த வாரம் தாக்கல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அப்போதே இந்த நேரடி வரி குறியீடு (DTC) குறித்துப் பேசியிருந்தார். தற்போதைய வருமான வரிச் சட்டங்களை விட புதிய சட்டம் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிமையாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வருமான வரி கொள்கைகளை மாற்றி அமைக்கும் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும், 63 ஆண்டுகால பழமையான வரி செலுத்தும் நடைமுறைகள் மாற்றப்படும் என நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இந்த புதிய மசோதா, வருமான வரி செலுத்தும் முறையை எளிதாக்கும் எனக் கருதப்படுகிறது.வருமான
வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு
கடந்த பட்ஜெட்டின்படி, ரூ.7 லட்சமாக இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போது 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரி விலக்கு அறிவிப்பானது, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4 ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்யலாம்.












Click it and Unblock the Notifications