புதின் + ஜி ஜின்பின் உள்பட 18 உலக தலைவர்கள்.. பிரிக்ஸ் மாநாட்டில் யார் யார் பங்கேற்பு? முழு லிஸ்ட்
டெல்லி: உலகளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ள 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை நம் நாடு தலைமையேற்று நடத்த உள்ளது. இந்த உச்சி மாநாடு டெல்லியில் நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தவிர யார் யார்? இந்த மாநாட்டில் மேலும் பங்கேற்க உள்ள தலைவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகி உள்ளன.

உலகளவில் ஒவ்வொரு நாடுகளும், பிற நாடுகளுடன் சேர்ந்து பல்வேறு கூட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளன. அதில் முக்கியமான ஒரு கூட்டமைப்பு தான் 'பிரிக்ஸ்' (BRICS). இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் மொத்தம் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அதன்படி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்கும்.
அந்த வகையில் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. அதன்படி டெல்லியில் நாளை முதல் நாளை மறுநாள் வரை 2 நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அப்போது வர்த்தகம், முதலீடு, எனர்ஜி, உணவு பாதுகாப்பு, உள்பட பிற உலகளாவிய பிரச்சனைகள் பற்றி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில் தான் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். முதல் ஆளாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லியில் தரையிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகி உள்ளன.
உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள்
* ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
* சீன அதிபர் ஜி ஜின்பிங்
* தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா
* ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான்
* இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ
* எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாக் எல்-சிசி
* மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
* ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
* எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி
* வியட்நாம் பிரதமர் லே மின் ஹங்
* பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் மவ்ரோ வியரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத அதேநேரத்தில் நம் நாட்டுடன் நல்லுறவை பேணக்கூடிய நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
* பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷன்கோ
* கசகஸ்தான் அதிபர் காஷ்யம் ஜோமார்ட் டோகாயேவ்
* மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
* தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்னவிராகுல்
* கியூபா அதிபர் மிக்யூ் டியாஸ் கேனல்
* நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு
* உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்காத் மிர்ஷியோயேவ்
* உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இவர்கள் தவிர ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரஸ் பங்கேற்க உள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் வந்துள்ளதால் பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் வந்து இறங்கும் விமான நிலையங்கள், தங்கும் ஹோட்டல்கள் மற்றும் உச்சி மாநாடு நடக்கும் பாரத் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
