ரொம்ப பதற்றமா இருக்கு! ஆனால் வெற்றி பெறுவோம்! நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு என்ஜினீயர் திக்திக்
டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர கட்டடங்கள் இன்று இடித்து அகற்றப்படும் நிலையில் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் ‛ரொம்ப பதற்றமாக இருக்கு. ஆனாலும் பணியை 100 சதவீதம் வெற்றிகரமாக முடிப்போம் என கட்டட இடிப்புக்கான நிறுவன என்ஜினீயர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிம் நொய்டாவில் ஏபெக்ஸ், சியான் எனும் பெயரில் 2 அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டன. மொத்தம் 40 மாடிகள் கொண்ட இந்த கட்டடங்களின் உயரம் 320 அடியாகும்.
குதூப் மினாரை விட உயரமான இந்த கட்டடம் தான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய கட்டடம். 10 ஆண்டுகால சட்டப்போராட்டத்துக்கு பிறக இந்த இரட்டை கோபுர கட்டங்கள் இன்று இடிக்கப்பட உள்ளன.

இரட்டை கோபுரம் இடிப்பு
2004ம் ஆண்டில் இந்த இரட்டை கோபுரம் கட்டட பணி துவங்கியது. 'சூப்பர்டெக்' நிறுவனம் பணியை மேற்கொண்டது. கட்டடம் உயர உயர வரைபடத்துக்கும் கட்டுமானத்தின் வடிவத்துக்கும் வேறுபாடு இருந்தது. மேலும் புவியியல் அமைப்புக்கு எதிராக கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 2012ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ல் இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2021ல் ஆகஸ்ட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதனடிப்படையில் இன்று இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுகிறது.

3700 கிலோ வெடிமருந்துடன் 9 நொடியில் இடிப்பு
இன்று மதியம் 2.30 மணிக்கு இந்த இரட்டை கோபுர கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளது. மும்பையை சேர்ந்த நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த இரட்டை கோபுர கட்டடத்தை சுற்றி ஏராளமான பில்டிங்குகள் உள்ளதால் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டடத்தை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது. கட்டத்தின் அனைத்து தளங்களிலும் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. வெறும் 9 வினாடி முதல் 12 வினாடிக்குள் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த கட்டட இடிப்பு பணியானது ரூ.20 கோடி செலவில் இந்த கட்டங்கள் இடிக்கப்படுகிது.

10,000 பேர் வெளியேற்றம்
இந்த இடிப்பு பணியையொட்டி நொய்டா வளர்ச்சி குழுமம் தீவிர ஆலோசனை செய்துள்ளது. இந்த குழுமத்தின் வழிக்காட்டுதல்படி கட்டட இடிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த கட்டட இடிப்பையொட்டி அந்த பகுதியில் உள்ள பிற கட்டடங்களில் வசித்து வரும் 10,000 மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கவுதம் புத்த நகர் காவல்துறையால் இரட்டைக் கோபுரத்தைச் சுற்றி இரும்பு தடுப்புகள் வைத்து யாரும் நுழையாத வகையில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கடந்த சில நாட்களாகவே அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை சில விலங்குகள் நல அமைப்புகள் அந்த பகுதிக்கு சென்று ஏதேனும் விலங்குகள், கால்நடைகள் அங்கு உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

விமானங்களுக்கு எச்சரிக்கை
மேலும் கட்ட இடிப்பு பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது. மேலும் கட்டட இடிப்பால் அதிகளவில் புழுதி கிளம்பும் என்பதால் விமான நிறுவனங்களுக்கும் இதுபற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக விமானங்களும் இன்று பறக்காமல் மாற்று பாதையில் செல்ல உள்ளன. மேலும் கட்டட இடிப்புக்கு பிறகு அங்கு ஏற்படும் காற்று மாசு உள்ளிட்டவற்றை அளவீட வசதியாக இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனடி சிகிச்சை வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பதற்றமாக இருக்கு..
இதுபற்றி கட்டட இடிப்பு பணியை செய்யும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் உட்கர்ஷ் மேத்தா கூறுகையில், ‛‛பதற்றமாக இருக்கிறேன். ஆனால் திட்டமிட்டபடி கட்டட இடிப்பை செய்வோம் என 100 சதவீதம் நம்புகிறோம். இந்த கட்டட இடிப்பால் பிற கட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கடந்த 6 மாதங்களாக பொதுமக்களிடம் உறுதியாக கூறினோர். இன்றும் அதையே கூறுகிறோம். பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இதுபற்றி அந்த பகுதியில் வசித்து வரும் மனு சோனி கூறுகையில், ‛‛இன்று காலை நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். நாங்கள் வசிக்கும் வீடு இரட்டை கோபுரத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது நாங்கள் நண்பரின் வீட்டுக்கு செல்கிறோம். கட்டட இடிப்பை டிவியில் பார்க்க உள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications