சீரம் நிறுவனத்திடம் கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர்... மத்திய அரசு அதிரடி
டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 10 ஆயிரத்திற்குக் கீழாகக் குறைந்துள்ளது. இருப்பினும், மற்ற நாடுகளில் ஏற்பட்டதைப் போல மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுவதைத் தடுக்க, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கோவிஷீல்டு தடுப்பூசியே பெரும்பாலும் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் 50 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர் அளித்துள்ளது. உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், தற்போது வரை சுமார் 1.1 கோடி தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசுக்கு அளித்துள்ளது
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. நேற்று 8,947 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா உயிரிழப்பும் 81ஆக குறைந்துள்ளது.