நடுக்கடலில் ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய இந்திய கடற்படை! 20 பேரும் மீட்பு
டெல்லி: மும்பையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஈரானுக்கு சொந்தமான அசினி கப்பலையும், அதில் இருந்த 20 மாலுமிகளையும் இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலையும், அதில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட கடற்படையின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
அரபிக் கடலில் ஈரானுக்கு சொந்தமான மீன் பிடி கப்பல் ஒன்று கடந்த 29 ஆம் தேதி மீன் பிடித்துக்கொண்டு இருந்தது. இந்த அசினி என்ற சிறிய ரக கப்பலில் 20 பேர் இருந்தனர். இந்தக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு கிடைத்தது.

20 மாலுமிகளும் பத்திரமாக மீட்பு
இதையடுத்து மும்பையில் இருந்து அரபிக்கடலில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அசினி மீன் பிடி கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடற்படை இறங்கியது. சோமாலிய கடற்கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அசினி கப்பலையும் அதில் இருந்த 20 மாலுமிகளையும் இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. 48 மணி நேரம் இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை வெற்றிகரமாக அனைவரையும் மீட்டது.
கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரானிய மாலுமிகளை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது:-
இந்திய கடற்படைக்கு பாராட்டு
அரபிக்கடலில் மும்பையிலிருந்து 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 'அசினி' மீன்பிடிக் கப்பலில் இருந்த 20 பேரையும் பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 48 மணி நேரத்தில், துல்லியமாகத் திட்டமிட்டு இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலையும், அதில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட கடற்படையின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கைக்கு இந்திய விமானப்படையும் உரிய நேரத்தில் ஆதரவு அளித்தது. பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பதிலும், இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது. கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் தனது திறனை இந்திய கடற்படை வெளிப்படுத்தியுள்ளது.." என்று பதிவிட்டுள்ளார்.
நன்றி சொன்ன ஈரான்
ஈரானும் இந்தியாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் அரசு தரப்பில் கூறியிருப்பதாவது:- அசினி கப்பலில் இருந்து 20 ஈரானியர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்ட இந்தியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய படைகள் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நடவடிக்கை ஈரான் இந்தியா இடையேயான நட்பு மற்றும் ஒற்றுமைக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. பேரிடர் நிவாரண பணி மற்று மானிதாபிமான விவகாரங்களில் எல்லைகளை கடந்து இந்தியா காட்டும் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது" என்று தெரிவித்துள்ளது.




Click it and Unblock the Notifications
