இந்தியாவில் குரங்கு அம்மை.. விலகாத டெல்லி மர்மம்! முன்பே இருந்திருக்கலாம் என ஷாக் தந்த விஞ்ஞானிகள்
டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றானது நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏனெனில், முதன் முறையாக கேரளாவில் கண்டறியப்பட்ட இந்த தொற்று பாதிப்பு மற்ற நாடுகளிலிருந்து பரவியது அல்ல என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, குரங்கு அம்மை தொற்று அதிகமாக உள்ள ஐரோப்பாவில் B.1 வைரஸ் இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கேரளாவில் கண்டறியப்பட்ட தொற்று பாதிப்பு A.2 வகை வைரஸால் உருவானது என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
அதேபோல இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று பாதிப்புகள் ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டுடன் எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல என்றும் கூறியுள்ளனர். எனவே இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்த தொற்று பாதிப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் சந்தேகித்துள்ளனர்.

A.2 வகை வைரஸ்
மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் அமைப்பின் மருத்துவர் வினோத் ஸ்காரியா மற்றும் அவரது குழுவினர் இந்த சந்தேகத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அடையாளம் காணப்படாமல் இருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல கேரளாவில் கண்டறியப்பட்ட இந்த A.2 வகை வைரஸ் தொற்றானது அமெரிக்கா மற்றும் தாய்லாந்தில் பொதுவாக காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகம்
மேலும், "நாம் இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு முதலில் ஆப்ரிக்கா அல்லது ஐரோப்பாவில் இருந்து பரவியதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த 2021ம் ஆண்டிலிருந்தே இந்த தொற்று பாதிப்பு அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது 4 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு வெளிநாட்டு பயண வரலாறு உண்டு. ஆனால் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இந்த பயண வரலாறு இல்லை. நாட்டின் மற்ற மாநிலங்களிலும் இந்த தொற்றுக்கான அறிகுறியுடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்ல." என்று கூறியுள்ளார்.

வேலூர் சிஎம்சி
கடந்த 2 மாதங்களில் உலகம் முழுவதும் சுமார் 78 நாடுகளில் 19,000 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் அமைப்பை சார்ந்த மருத்துவர் ஒருவரின் மேற்குறிப்பிட்ட கருத்தானது மக்களிடையே புதிய பேசுபொருளாக உருவாகி உள்ளது. இதேபோல, "இதுவரை இந்த குரங்கு அம்மை தொற்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் இந்த தொற்று குறித்து பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை" என்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் சமூக சுகாதாரத் துறை பேராசிரியர் டாக்டர் ஜான் கூறியுள்ளார்.
Recommended Video

புதிய விவாதம்
மேலும், "பயங்கரமான பெரியம்மை நோயை ஏற்படுத்தும் அதே வேரியோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த குரங்கு அம்மை வைரஸ் இதுவரை அதிக அளவில் பரவவில்லை" என்பதையும் ஜான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்புகளின் பாதிப்பு ஏற்கெனவே இருந்திருக்கலாம் என நாம் கணிப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என மும்பையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் நெர்கெஸ் மிஸ்ட்ரி சமீபத்தில் கூறியுள்ளார். மேலும், "ஒரேயொரு வைரஸ் பல்வேறு இடங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்" எனவும் நெர்கெஸ் குறிப்பிட்டார்.
சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு இந்த குரங்கு அம்மை பாதிப்பு குறித்து சுகாதார அவசர நிலையை அறிவித்திருந்தது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications