5ஜி டவுன்லோடு ஸ்பீட்.. ஏர்டெல்லை விட ஜியோ 3 மடங்கு அதிகம்.. ஊக்லா தகவல்
டெல்லி: இந்தியாவில் 5ஜி அலைவரிசை சேவையை கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெலை விட ஜியோவில் டவுன்லோட் வேகம் மூன்று மடங்கு அதிகம் இருப்பதாக தொழில்நுட்ப இணையதளமான ஊக்லா தெரிவித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 மாநாட்டில் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தன.
இந்த நிலையில் ஊக்லா எனப்படும் இணையதள வேக கணக்கெடுப்பு நிறுவனமான ஊக்லா நடத்திய வேக பரிசோதனையில் இந்தியாவில் 5ஜி வேகம் என்பது 500 Mbps ஐ விட தாண்டி பதிவானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எவ்வளவு வேகம்?
கடந்த மாதம் இந்தியாவில் 5ஜி பரிசோதனையின்போது பதிவான வேகம் இது என ஊக்லா நிறுவனம் தெரிவிக்கிறது. குறைந்தபட்ச வேகம் 16.27 Mbps தொடங்கி அதிகபட்ச வேகம் 809.94 வரை பதிவாகி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் இணையதள வேகத்தை அளவீடு செய்து வருகிறார்கள்.

டெல்லி, கொல்கத்தா
4 நகரங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் சராசரி 5ஜி வேக அறிக்கை ஊக்லா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டெல்லியில் ஏர்டெல் 5ஜியின் சராசரி வேகம் கிட்டத்தட்ட 200 Mbps ஐ எட்டி இருக்கிறது. அதே நேரம் ஜியோவின் வேகம் 600 Mbps ஐ எட்டியுள்ளது. கொல்கத்தாவில் ஏர்டெலின் சராசரி டவுன்லோடு வேகம் வெறும் 33.83 Mbps வரையிலும் ஜியோவின் டவுன்லோடு வேகம் 482.02 Mbps வரையிலும் எட்டுகிறது.

வாரணாசியில் ஏர்டெல்
மும்பையில் ஏர்டெலின் சராசரி டவுன்லோடு வேகம் வெறும் 271.07 Mbps வரையிலும் ஜியோவின் டவுன்லோடு வேகம் 515.38 Mbps வரையிலும் எட்டுகிறது. ஏர்டெலின் 5ஜி வேகம் ஜியோவுக்கு இணையாக இருப்பது உத்தரப்பிரதேச தலைநகர் வாரணாசியில் மட்டும்தான். அங்கு ஏர்டெலின் சராசரி டவுன்லோடு வேகம் 516.57 Mbps வரையிலும் ஜியோவின் வேகம் 485.22 Mbps ஆகவும் உள்ளது.

4ஜி வேகம்
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி LTE அலைவரிசையின் வேகத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 13.52 என்ற சராசரி மொபைல் டவுன்லோடு வேகத்துடன் 117 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 5ஜி முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி ஸ்மார்ட்போன்
ஊக்லா வெளியிட்டு இருக்கும் மற்றொரு வாடிக்கையாளர் கணக்கெடுப்பில் 89 சதவீத இந்திய ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தங்கள் போன்களை 5ஜியாக மாற்றி இருக்கிறார்கள். ஊக்லா வேக கணக்கெடுப்பு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்களில் 67.4% பேர் ஜியோ பயனாளர்கள் என்றும், 61.6% பேர் ஏர்டெல் பயனாளர்கள் எனவும், 56% பேர் வோடபோன் - ஐடியா பயனாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications