17 ஆண்டு போராட்டம்.. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு விவாகரத்து வழங்கிய உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - மனைவி பாயல் அப்துல்லா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக இருவரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்த்து விட்டதாக உச்சநீதிமன்றத்தில் கூறிய நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவருக்கும் டெல்லியை சேர்ந்த பாயல் அப்துல்லா என்ற பெண்ணுக்கும், கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் 2 பேர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2009ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையில் அவரது மனைவி பாயல் அப்துல்லா தனது 2 மகன்களுடன் டெல்லி வந்தார்.
இதற்கிடையே தான் உமர் அப்துல்லா சார்பில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உமர் அப்துல்லா சார்பில், ''திருமண உறவு மீள முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது. மனைவி கொடுமைப்படுத்துகிறார். 2007ம் ஆண்டு முதல் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை மனைவியின் நடத்தை மனஉளைச்சலையும், வேதனையும் கொடுத்தது'' என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. மனைவி பாயல் அப்துல்லா கொடுமைப்படுத்துவதாக உமர் அப்துல்லா கூறியும் அதனை நிரூபிக்க தவறிவிட்டார் என்று கூறி கடந்த 2016ம் ஆண்டில் விவாகரத்து வழங்க மறுத்து குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உமர் அப்துல்லா சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மனைவி பாயல் அப்துல்லாவின் பராமரிப்புக்கு மாதம் ரூ.75 ஆயிரமும், இருமகன்களின் படிப்புக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அதிகரிக்க கோரி மனைவி, மகன்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மாதந்தோறும் மனைவி பாயல் அப்துல்லாவிற்கு பராமரிப்பு செலவுக்கு ரூ.1.50 லடசமும், இருமகன்களின் படிப்பு செலவுக்காக ரூ.60 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது. இருப்பினும் டெல்லி உயர்நீதிமன்றமும் விவாகரத்து வழங்க மறுத்ததோடு, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
உமர் அப்துல்லா - பாயல் அப்துல்லா சார்பில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல வழக்குகள் தொடரப்பட்டன. உமர் அப்துல்லா சார்பில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் விவாகரத்து கோரி 2024 ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது கடந்த 17 ஆண்டுகளாக அவர்களின் விவாகரத்து வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோருவதாக இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூட்டு மனு கடந்த 22ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இருவரும் சுதந்திரமாக வாழ முடிவெடுத்துள்ளனர். இருவருக்கும் இடையே இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் இருவருக்கும் விவாகரத்து வழங்கலாம். மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்" என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், "நல்லது. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நாங்கள் இந்த வழக்கை முடித்து வைப்போம். ஒருவருக்கு எதிராக மற்றவர் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற இருவரும் ஒப்புக்கொண்டுள்ள விவரங்களை நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்யும்" என தெரிவித்து விவாகரத்து வழங்கினர்.


Click it and Unblock the Notifications
