லிப்ட் இருந்தும் பயன்படுத்த தடை.. 21 மாடிக்கு கல்லை தூக்க வைத்த கொடூரம்! மனசாட்சியை உலுக்கிய வீடியோ
டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் 4 லிப்டுகள் இருந்தும், கட்டுமான தொழிலாளியை தலையில் சுமையுடன் 21 மாடிகளுக்கு ஏற வைத்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருக்கிறது.
கட்டுமான தொழில் என்றாலே அது கடுமையான உடல் உழைப்பு வேலைதான். இருப்பினும், லிப்ட் இருந்தும் தலையில் சுமையுடன் 21 மாடியை ஏற வைப்பதெல்லாம் உச்சக்கட்ட கொடுமை என்று பலரும் கூறுகின்றனர்.

இது தொடர்பான வீடியோவை டிம்ப்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஷேர் செய்திருந்தார். அதில், "இந்த குடியிருப்பில் 4 லிப்ட்கள் இருக்கின்றன. அனைத்தும் சிறப்பாக இயங்குகின்றன. இருப்பினும், தொழிலாளர்கள் பொருட்களை மேலே கொண்டு செல்ல இந்த மின்தூக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. ஏழை தொழிலாளர்கள் 21 மாடிகள் வரை படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறார்கள். இப்படித்தான் நம் நாடு முன்னேற போகிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த வீடியோவை அமித் சிங் என்ற x பயனர் பகிர்ந்து, லிப்ட் குடியிருப்பாளர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டு, தொழிலாளி ஒருவர் 21 மாடிகளுக்கு வெயிட்டை தூக்கிக்கொண்டு செல்ல வைக்கப்பட்டிருக்கிறார். இது அப்பட்டமான மனிதநேயமற்ற செயல்" என்று விமர்சித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
This worker is forced to carry heavy loads all the way up to the 21st floor, despite the building having 4 lifts reserved strictly for "residents only" Pure lack of basic humanity. https://t.co/Bx5RRe48tp
— Amit Singh (@RockstarAmit) October 29, 2026
சிலர் இந்த மாதிரியான நடத்தையை நவீன கால அடிமைத்தனம் என்று ஒப்பிட்டு விமர்சித்துள்ளனர். பல நூற்றாண்டுகள் கடந்து நாகரிகமடைந்த பின்னரும் சக மனிதர்களை இப்படி சுரண்டுவது வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆடம்பரக் கட்டிடங்களை விரும்பும் குடியிருப்பாளர்களுக்கும், அந்த கட்டிடத்தையே தங்களின் உழைப்பால் உருவாகும் தொழிலாளர்களுக்கும் இடையே காட்டப்படும் இந்த வர்க்க பாகுபாட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச மனிதநேய அடிப்படையிலான வேலை சூழல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் டெல்லி அருகே நொய்டாவில் நடந்திருக்கிறது. சொகுசு குடியிருப்புகளில் டெலிவரி ஊழியர்களுக்கு, வீட்டு பணியாளர்களுக்கு லிப்ட் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது வழக்கமானதுதான். இருப்பினும், தலையில் பாரத்தை சுமந்துக்கொண்டு 21 மாடிகளுக்கு ஏற சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
