'லட்சத்தீவு மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல்.. அங்கு எந்த சட்டமும் கொண்டுவரப்படாது'.. அமித்ஷா உறுதி!
டெல்லி: லட்சத்தீவு மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அங்கு எந்த சட்டமும் கொண்டுவரப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் தெரிவித்தார்.
Recommended Video
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு நமது அண்டை மாநிலமான கேரளாவின் கடலோரத்தின் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ளது.

லட்சத்தீவில் எழுந்துள்ள சர்ச்சை
லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகு நிரம்பி வழியும் லட்சத்தீவில் சுற்றுலாத் துறை, மீன்பிடி பிரதானமான தொழிலாக உள்ளது. லட்சத்தீவில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் கோடா படேல் என்பவரை நிர்வாகியாக நியமித்துள்ளது மத்திய அரசு. அங்குள்ள மக்களுக்கு எதிராக பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சி கண்டனம்
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது என பிரஃபுல் கோடா படேல் தன்னிச்சையாக எடுத்து வரும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமித்ஷாவுடன் சந்திப்பு
பிரஃபுல் கோடா படேலை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில் லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். புதிய விதிமுறைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், பிரஃபுல் கோடா படேலை திரும்ப பெற வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.

எதிர்ப்பை தெரிவித்தேன்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய முகமது பைசல் கூறியதாவது:- புதிய நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் கொண்டு வந்த வரைவுச் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பை உள்துறை அமைச்சருக்கு தெரிவித்தேன். இந்த சட்டங்களால் லட்சத்தீவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு குறித்து அவரிடம் கூறினேன். பரிசீலனையில் உள்ள எந்த சட்டங்கள் இருந்தாலும் அவை லட்சத்தீவுக்கு அனுப்பப்படும், அங்கு மாவட்ட பஞ்சாயத்திலுள்ள உள்ளூர் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்படும் என்று அமித்ஷா என்னிடம் கூறினார்.

மக்கள் ஒப்புதல் முக்கியம்
லட்சத்தீவில் எந்த ஒரு சட்டம் போடுவதாக இருந்தாலும் அவை இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் மக்களின் ஒப்புதல் கவனத்தில் கொள்ளப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். புதிய நிர்வாகி பிரஃபுல் கோடா படேலை அங்கு இருந்து நீக்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துளேன். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தனது கட்சி தலைவர் சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்புக்கு அனுமதி கோரியுள்ளதாக முகமது பைசல் கூறினார்.












Click it and Unblock the Notifications