மாஸ்டர் பிளான்! திடீரென டெல்லி புறப்படும் மம்தா.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய மீட்டிங்
டெல்லி: வரும் நவ. 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், மே வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் நவம்பர் 22 - 25க்குள் டெல்லி செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஓராண்டாகவே போராட்டம் தொடர்ந்த நிலையில், இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி, மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மம்தா டெல்லி பயணம்
இந்தச் சூழலில் வரும் நவ். 29ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தச் சூழலில் குளிர் காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நவ்.22-25 தேதிகளில் மே வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
அங்கு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் அவர், நடைபெறவுள்ள குளிர்காலக் கூட்டத்தொடரில் பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலும் பல அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மம்தா பானர்ஜி இந்த பயணத்தில் பிரதமர் மோடியையும் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு
மத்திய அரசு BSF எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிகார வரம்பைச் சர்வதேச எல்லையில் இருந்து 50 கிமீ ஆக அதிகரித்தது. பிரதமர் மோடி உடனான சந்திப்பில் மம்தா பானர்ஜி இது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் தலையிடும் முயற்சி என்று இதைச் சாடியிருந்தார்.

முதல்முறை இல்லை
இதேபோல கடந்த ஜூலை மாதம் மம்தா, தொடர்ந்து 3ஆவது முறையாக முதல்வர் பதவி ஏற்ற பிறகு டெல்லிக்கு சென்றிருந்தார். அப்போதும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒன்றிணைப்பதே நோக்கமாக இருந்தது. அப்போது காங்கிரஸின் ப சிதம்பரம் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை மம்தா நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

சோனியா காந்தியுடன் சந்திப்பு
குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர்கள் இல்லத்தில் மம்தா பானஜ்ரி சந்தித்துப் பேசியிருந்தார். 2024 மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், 2024 மக்களவை தேர்தலில் மம்தா பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியானது. இது குறித்து மம்தாவிடம் கேள்வி எழுப்பிய போது, "அனைத்தையும் இப்போதே முடிவு செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் வேறு மாதிராயன சூழல் ஏற்படலாம். குறைந்தபட்ச ஒத்துழைப்பு திட்டம் தான் இப்போது தேவை" என குறிப்பிட்டிருந்தார். மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மம்தா தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications