இஸ்லாமிய தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு.. ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
டெல்லி: இஸ்லாமிய தலைவருடன் மோகன் பகவத் சந்தித்துவந்த நிலையில், ''ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த வகையிலும் கொள்கையில் இருந்து விலகவில்லை என்றும், மோகன் பகவத் - இமாம் சந்திப்பு சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது தான் என்றும் ஆர் எஸ் எஸ் விளக்கமளித்துள்ளது.
பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் சமீப நாட்களாக இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.
கடந்த மாதம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரோஷி மற்றும் டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அலிகார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உத்தின் ஷா, முன்னாள் எம்.பி ஷாகித் சித்திக் மற்றும் தொழில் அதிபர் சையத் ஷீர்வானி ஆகியோரையும் மோகன் பகவத் சந்தித்து பேசியிருந்தார்.

மிகவும் தவறானது
இந்த சந்திப்பு குறித்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, நாட்டில் தற்போது நிலவும் சூழல் தனக்கு கவலை அளிப்பதாகவும் தற்போதுள்ள சூழல் மிகவும் தவறானது. ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையுடன்தான் நாடு முன்னேற முடியும் என்று மோகன் பகவத் கூறியதாக தெரிவித்தார். மோகன் பகவத் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.

ஒரு மணி நேரம் நீடித்த ஆலோசனை
இந்த நிலையில், நேற்று டெல்லியில் உள்ள முக்கிய மதகுருவான அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், பாஜகவின் முன்னாள் அமைப்புச் செயலாளரான ராம் லால் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். வேறு யாருக்கும் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆலோசனை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

அனைவரது மரபணுவும் ஒன்றுதான்
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-எனது அழைப்பை ஏற்று மோகன் பகவத் வருகை தந்தார். அவர் தேசத்தின் தந்தை (ராஷ்டிர பிதா). நமது அனைவரது மரபணுவும் ஒன்றுதான். கடவுளை வழிபடும் முறைதான் வேறு வேறு என்று மோகன் பகவத் கூறினார்'' என்றார். மோகன் பகவத்தின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் விளக்கம் அளித்துள்ளது.

தவறான புரிதல்களை..
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதாவது:- ''ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த வகையிலும் கொள்கையில் இருந்து விலகவில்லை. மோகன் பகவத் - இமாம் சந்திப்பு சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகும். இதுபோன்ற சந்திப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது சிலர் தவறான புரிதல்களை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications