அரே பையா.. "உங்க தமிழ்நாட்டுலயும் அதானி கூட ஒப்பந்தம் சைன் ஆகியிருக்கு”.. நிர்மலா சீதாராமன் பதிலடி!
டெல்லி : அம்பானி, அதானிக்கு மட்டும் தான் மத்திய அரசு உதவி செய்வதாக குற்றம்சாட்டுகிறீர்கள். ஹரே பையா.. உங்கள் தமிழ்நாட்டில் அதானியுடன் சேர்ந்து டேட்டா சென்டர் அமைக்கிறது அரசு என நாடாளுமன்றத்தில் பேசினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் நிறுவனங்களையே வளர்த்தெடுக்கும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் குற்றம்சாட்டிப் பேசினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்கள் தமிழ்நாட்டில் அதானியுடன் சேர்ந்து டேட்டா சென்டர் அமைக்கிறது தமிழக அரசு எனச் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற லோக்சபா
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு அவைகளிலும் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் லோக்சபாவில் நேற்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த விவாதத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக உள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களையே வளர்த்தெடுக்கும் ஆட்சி நடைபெறுகிறது எனக் குற்றம்சாட்டினார்.

ஹரே பையா..
விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும் தான் இந்த அரசு எல்லாம் செய்வதாக குற்றம்சாட்டுகிறீர்கள். ஹரே பையா.. உங்கள் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி மதிப்பில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. அதானியுடன் சேர்ந்து டேட்டா சென்டர் அமைக்கிறது தமிழக அரசு.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன்? ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, மின்சாரம் தயாரிப்புக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அதானிக்கு வழங்குகிறது." எனக் குற்றம்சாட்டினார்.

சொல்லிட்டு ஏன் குறைக்கல?
மேலும், பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் ரூ.5, டீசல் விலையில் ரூ.4ம் குறைப்போம் என்று சொன்னார்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் மத்திய அரசு எரிபொருள் மீதான விலையைக் குறைத்தபோதும், தமிழகத்தில் உள்ள தி.மு.க அரசு ஏன் விலையைக் குறைக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

கேட்டுத்தான் ஆகணும்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேசியபோது, திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் குறுக்கிட்டனர். அதற்கு நீங்கள் பேசுவதை நான் கேட்கிறேன். அதுபோல் நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என நிர்மலா சீதாராமன் ஆவேசமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications