வங்கதேச விடுதலைப் போருக்கு ஆதரவாக மோடி சிறைக்கு சென்றாரா? ஆவணம் இல்லை என கைவிரித்த பிரதமர் அலுவலகம்!
டெல்லி: 1971-ல் வங்கதேச விடுதலைப் போர் காலத்தில் பிரதமர் மோடிக்கு சிறைக்கு சென்றது தொடர்பாக எந்த ஆவணமும் தங்களிடம் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
1971-ல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டு தனி சுதந்திர நாடாக உருவானது. வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா யுத்தம் நடத்தியது. வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். டாக்கா சென்ற பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செலுத்துவதற்காக தேசிய போர்வீரர்கள் நினைவிடத்துக்கு (ஜதியோஸ்ரீதிஷவ்டோ) சென்றார். இந்த நினைவிட வளாகத்தில் அர்ஜூன் மரக்கன்றையும் பிரதமர் நட்டு, பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், சாவர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு, உண்மையின் உன்னத வெற்றியின் நீடித்த நினைவூட்டலாகவும், வஞ்சம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தைரியமாகவும் விளங்க வேண்டும் என நான் வேண்டுகிறேன் என எழுதினார் பிரதமர் மோடி.

வங்கதேச போர்- சத்தியாகிரகம்- மோடி கைது
பின்னர் டாக்காவில் நடந்த தேசிய அணி வகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதில் பேசிய பிரதமர் மோடி, வங்கதேச விடுதலைப் போர் உங்களது வாழ்க்கையில் மட்டும் அல்ல என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். வங்கதேச விடுதலைப் போர் காலத்தில் எனக்கு 20 முதல் 22 வயது இருக்கும். நான் என்னுடைய சகாக்களுடன் வங்கதேச விடுதலைக்காக குரல் கொடுத்து போராட்டத்தில் பங்கெடுத்தேன். அது ஒரு சத்தியாகிரக போராட்டம். அந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக நான் கைதானேன் என்று பேசினார் பிரதமர் மோடி.மேலும் எனக்கு நினைவு தெரிந்த வகையில் அதுதான் என்னுடைய முதல் அரசியல் கைது நிகழ்வு என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மோடி பேச்சால் பெரும் சர்ச்சை
பிரதமர் மோடியின் இந்த பேச்சு கடந்த ஆண்டே பெரும் சர்ச்சையானது. வங்கதேச விடுதலைக்காக இந்தியா போரே நடத்துகிற போது மோடி யாரை எதிர்த்து சத்தியாகிரகம் செய்தார்? எதற்காக அவரை கைது செய்தனர்? என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு வலதுசாரி தரப்பிலும் சில ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. வங்கதேச விடுதலைப் போர் நடந்த போது, ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை சேர்க்கக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது; அதில் மோடியும் பங்கேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் சில நூல்களை மேற்கோள் காட்டினர் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள். ஆனாலும் இந்த சர்ச்சை ஓயாமல் இருக்கிறது.

ஆவணம் இல்லை- பிரதமர் மோடி அலுவலகம்
வங்கதேச விடுதலைக்கான சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பங்கேற்றது; அவர் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி பிரதமர் அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி அலுவலகம், இது தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என பதில் தந்துள்ளது. பிரதமர் மோடி சத்யாகிரகத்தில் பங்கேற்றாரா? இல்லையா? என்பது தொடர்பான தெளிவான பதிலைத் தரவில்லை.

வாஜ்பாய் நடத்திய சத்தியாகிரகம்
இது தொடர்பாக மூத்த அரசியல் தலைவர்களிடம் நாம் பேசிய போது, 1971-ல் வங்கதேச விடுதலைப் போர் கால கட்டத்தில் இந்தியா-சோவியத் ஒன்றியம் (ரஷ்யா உள்ளிட்டக்கிய 15 நாடுகளின் கூட்டமைப்பு) இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை அப்போதைய ஜனசங்கம் (பாஜகவின் தாய் அமைப்பு), மறைந்த வாஜ்பாய் தலைமையில் எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை டெல்லியில் நடத்தியது. அதாவது வங்கதேச விடுதலையை இந்தியா- சோவியத் ஒப்பந்தம் தாமதப்படுத்திவிடும் என எதிர்ப்பு தெரிவித்து ஜனசங்கத்தின் போராட்டம் நடந்தது என குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications