மகிழ்ச்சி செய்தி.. எல்லா வகை கொரோனாவையும் விரட்ட ஒரே தடுப்பூசி! எலிகளுக்கு நடந்த பரிசோதனை வெற்றி
டெல்லி: இந்தியாவில் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக, 40 கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உருமாற்றம் மிக கவலையளிக்க கூடியது என்று அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 21, மத்திய பிரதேசத்தில் 6, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தலா மூன்று, கர்நாடகாவில் இரண்டு மற்றும் பஞ்சாப், ஆந்திரா மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் தலா ஒரு கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது செயல்பாட்டிலுள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்து வகை கொரோனா உருமாற்றத்தையும் சரியாக எதிர்க்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு
டெல்டா பிளஸ் கொரோனா வைரசை தடுப்பூசிகளால் எதிர்க்க முடியாது என்று சில தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுவதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில்தான், அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது ஒரு புதிய, கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். இது கொரோனாவின், அனைத்து வகைகளையும் வேரறுக்கும்.

பெருந்தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்கும்
அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி எதிர்காலத்தில் புதிதாக பெருந்தொற்று (pandamic) உலகில் ஏற்படுவதை தடுக்கும். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இது பற்றிய ஆய்வுகளை ஏற்கனவே தொடங்கியிருந்தனர். தற்போது அதுபோன்ற ஊசியை எலிகளுக்கு செலுத்தி பரிசோதித்துள்ளனர்.

இரு வகை வைரஸ்கள் மோசம்
இந்த தடுப்பூசி இரண்டாம் தலைமுறை தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது. தடுப்பூசி வைரஸின் அனைத்து உருமாற்றங்களுக்கு எதிராகவும், செயல்படுகிறது. ஒரே வைரசை சேர்ந்த உருமாற்றங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று SARS, மற்றொன்று கோவிட் -19. எனவே இதுபோன்ற உருமாற்றங்களை தடுப்பது விஞ்ஞானிகளின் முதல் இலக்காக உள்ளது.

எலிகள் மீது பரிசோதனை வெற்றி
விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி எலிகள் மீது பரிசோதிக்கப்பட்டது. சோதனைகள் ஆன்டிபாடிகள் எலிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இது ஸ்பைக் புரதத்தை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறதாம்.
பரிசோதிக்கப்பட்ட எலிகளுக்கு, SARS மற்றும் கோவிட் -19 வைரஸ்கள் செலுத்தி இதை உறுதி செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.

பல வைரஸ் பார்முலா
இந்த விஞ்ஞானிகள் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. பார்முலாவைப் பயன்படுத்துகிறார்கள். இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி போன்றதாகும்.
இருப்பினும் ஒரே ஒரு வைரசுக்கான மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. குறியீட்டைச் சேர்ப்பதற்கு பதிலாக, பல வைரஸ்களின் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.க்களை சேர்த்து பரிசோதிக்கிறார்கள். எனவேதான், எந்த உருமாற்றம் வந்தாலும், இந்த தடுப்பூசி அதை செயலிழக்கச் செய்து விடுமாம்.

உலகிற்கு மகிழ்ச்சி செய்தி
இவை அனைத்தையும் விரிவாக பரிசோதித்து வருவதாகவும், அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு மனிதர்கள் மீது பரிசோதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடைபெற்றால், மனித குலத்திற்கு அது மாபெரும் மகிழ்ச்சி திருநாளாக அமையும்.












Click it and Unblock the Notifications