பெகாசஸ்: நாங்க ஒட்டு கேட்கவில்லை... விசாரிக்க வல்லுநர் குழு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது; மேலும் இது தொடர்பாக விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தயாரித்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் பொதுவாக பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக் செய்ய பயன்படுத்தப்படும். இது ஒரு பயங்கரவாதத்துக்கு எதிரான ஆயுதம் என்ற அடிப்படையில் அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வழங்கியது.

இந்தியாவில் ஒட்டு கேட்பு
ஆனால் இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல் உலக நாடுகளில் பெகாசஸ் மென்பொருள் மூலமான ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

முடக்கப்பட்ட நாடாளுமன்றம்
இந்த பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் தர வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு பட்டும் படாமலும் பதிலளித்து வந்தது. மத்திய அரசிடம் இருந்து திட்டவட்டமான பதில் தேவை என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்
மேலும் பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் உள்ளிட்டோர் இந்த பொதுநலன் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

விசாரிக்க வல்லுநர் குழு
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இரண்டு பக்கங்களைக் கொண்ட பதில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உறுதிப்படுத்தப்படாத, முழுமை பெறாத தகவல்கள் அடிப்படையிலேயே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; ஊடகங்களில் வந்த தகவல் அடிப்படையில் மட்டுமே இந்த மனுக்கள் உள்ளன. மேலும் உளவு பார்க்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறும். குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறோம். யூகங்கள் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரமற்ற உள்நோக்கத்துடன் தவறான தகவல் பரப்பப்படுகிறது, இதனால் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எழும் சந்தேகங்களை தீர ஆராய்ந்து தீர்க்கும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications