பெகாசஸ் விகாரம்.. உலக அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்தும் ஒரு முயற்சி... அமித் ஷா பதிலடி
டெல்லி: பெகாசஸ் விவகாரம் உலக அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்தும் ஒரு முயற்சி எனக் கூறியுள்ள அமித் ஷா, இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதை விரும்பாதவர்களே இதைச் செய்கின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.
Recommended Video
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும். அவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்குச் செல்கிறார் என அனைத்தையும் கண்காணிக்க முடியும்.
பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், ஒரு நீதிபதி, 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் மொபைல் எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட 16 ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் வலியுறுத்தல்
தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இது மிகப் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. பிரதமர் மோடியிடம் பெகாசஸ் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் விசாரணை தொடங்குவதற்கு முன் உள் துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மக்களுக்கு புரியும்
இது தொடர்பாக அவர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் தடங்கல் உண்டாக்க நினைப்பவர்கள், சீர்குலைக்கத் திட்டமிடுபவர்களின் அறிக்கை. இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதை விரும்பாதவர்களே இதைச் செய்கின்றனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சரியாக நேற்றிரவு இது வெளியாகியுள்ளது. இது நடக்கும் காலவரிசையை மக்கள் புரிந்து கொண்டால் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

இழிவுபடுத்தும் முயற்சி
பெகாசஸ் விகாரம் உலக அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்தும் ஒரு முயற்சி. இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே இந்த அறிக்கையின் ஒரே நோக்கம். நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் நலனை முன்னேற்றும் வகையில் பல்வேறு மசோதாக்களை விவாதிக்க உள்ளோம். அதைத் திசை திருப்பவே இந்த பெகாசஸ் விவகாரம்.

ஜீரணிக்க முடியவில்லை
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது பெண்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இதைச் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் தான் இதைச் செய்துள்ளனர்" என்று கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications