"ஆளுநர் பதவி.. அமைச்சர் பதவி.. தேர்தல் ஆணையர்களுக்கு போன பரிசுகள்!" காங்கிரஸை சாடிய பியூஷ் கோயல்
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் நடுநிலைத்தன்மையையும் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் பலவீனப்படுத்தியதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு அரசியல் பதவிகள், அமைச்சர் பொறுப்புகள், ஆளுநர் பதவிகள் மற்றும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் மிக தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. நேற்று இதை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணியையும் நடத்தியிருந்தனர்.

பியூஷ் கோயல்
இதற்கிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் மீது முன்வைத்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளின் நியமனங்களை சுட்டிக்காட்டிய அவர், தங்களுக்கு சாதகமாக செயல்பட்ட தேர்தல் ஆணையர்களுக்கு பரிசாக காங்கிரஸ் கட்சி பதவிகளை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
பதவிகள்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ். கில், தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய பின்னர் எம்பியாக தேர்வானதாகவும், தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டதற்கு தரப்பட்ட பதவியா இது என்றும் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசுகையில், "டி.என். சேஷனின் பதவிக்காலம் 1985 டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 1986 பிப்ரவரி 26ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு அவரை குஜராத் ஆளுநராக நியமித்தது.
2005ஆம் ஆண்டு நவீன் சாவ்லா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது அப்போதே சர்ச்சையானது. 2009ஆம் ஆண்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். சாவ்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி அவரை பதவியிலிருந்து நீக்க பரிந்துரைத்தார். ஆனால், மன்மோகன் சிங் அரசு அந்த பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் சாவ்லா தலைமை தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். இது சோனியா காந்தி மற்றும் காங்கிரஸுக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசு.
நடுநிலைத்தன்மை
கேரள முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருந்த அதிகாரம் மீனா மற்றும் ரத்தன் யு. கெல்கர் ஆகியோர் கேரளாவில் பணியாற்றிய பிறகு ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இணைந்தனர். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, கெல்கர் கேரள முதல்வர் வி.டி. சதீசனின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் இதுபோல தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ஆளுநர், அமைச்சர், கட்சி பதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டது" என்றார்.
ராகுல் மீது பாய்ச்சல்
தொடர்ந்து ராகுல் காந்தியை குறித்தும் கடுமையாக சாடினார். அவர் கருவுற்று இருந்த பெண் செய்தியாளரை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பெண் செய்தியாளரிடம் ராகுல் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாடே பார்த்து. மேலும், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடனான சந்திப்புக்கு பிறகு ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
