சூப்பர்.. டிசம்பர் வரை வெங்காயம்-பருப்பு விலை உயராது.. தீபாவளி போனஸாக குட்நியூஸ் சொன்ன மத்திய அரசு
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைதல் மற்றும் பருவம் தவறிய மழை ஆகியவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்ற தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்தியாவில் டிசம்பர் மாதம் வரை வெங்காயம், பருப்பு வகைகளின் விலை உயர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு நல்ல செய்தியை கூறி உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது வரலாறு காணாத வகையில் 83 ஆக உள்ளது.
இது இந்திய பொருளாதாரத்தின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தற்போதைய பருவம் தவறிய மழையின் காரணமாக வெங்காயம், பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

விலை உயர வாய்ப்பு என தகவல்
ஏற்கனவே சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கலாம் என கூறப்பட்டது. மேலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் மாதந்திர பட்ஜெட் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கு அதிகரிக்கும். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிக பாதிப்பை சந்திக்கலாம் என்ற கவலைகள் எழுந்தன.

மத்திய அரசு விளக்கம்
இந்நிலையில் தான் இந்தியாவில் வெங்காயம், பருப்பு உள்பபட பல்வேறு தானியங்களின் விலைகள் உயர்வது பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் சிங் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது வெங்காயம், பருப்பு வகைகள் போதிய அளவு கையிருப்பு உள்ளது. விலை ஏற்றம் இருக்காது என கூறினார். இதுபற்றி ரோகி சிங் கூறியதாவது:

விலை உயர வாய்ப்பில்லை
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் வரை வெங்காயம், பருப்பு வகைகளின் விலைகள் உயர வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நம்மிடம் போதிய அளவிலான பொருட்கள் கையிருப்பில் உள்ளன. தற்போதைய மழையினாலும் பாதிப்பு என்பது அதிகளவில் இல்லை. இதனால் தானியங்களின் விலை உயர வாய்ப்பு இல்லை.

வெங்காய கையிருப்பு
இந்தியாவில் வெங்காய உற்பத்தி இருபருவங்களை சார்ந்துள்ளது. பொதுவாக கோடைக்காலமான காரீப் பருவத்தில் 45 சதவீத அளவும், குளிர் காலமான ராபி பருவத்தில் 65 சதவீத வெங்காயமும் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆண்டு வெங்காய விலை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. இதற்கு 2021-22 ராபி பருவத்தில் கிடைத்த சாகுபடியும், மத்திய அரசின் கையிருப்பில் இருந்த 2.50 லட்சம் டன் வெங்காயமும் தான் காரணமாகும். தற்போது மத்திய அரசின் கையிருப்பில் போதிய அளவு வெங்காயம் உள்ளது.

பருப்பு தட்டுப்பாடு வருமா?
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடியே 72 லட்சம் டன் அளவுக்கு பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு வகைள் உள்நாட்டில் உற்பத்தியாகிறது. இந்த ஆண்டு நம்மிடம் 43 லட்சம் டன் பருப்பு இருப்பில் உள்ளது. இதனால் பருப்பு வகைகளிலும் கூட தட்டுப்பாடு இருக்காது. ஒருவேளை பிரச்சனை ஏற்பட்டால் இறக்குமதி செய்வது உள்பட மாற்றுவழியை மத்திய அரசு தயாராக வைத்துள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications