“நரேந்திர மோடி என ஒரு சாம்பியன் இருந்தார்.. எங்கள் ரோல் மாடல்”: டெல்லியை அதிரவிட்ட அமைச்சர் பிடிஆர்!
டெல்லி: நரேந்திர மோடி என்ற கூட்டாட்சி தத்துவத்தின் தலைசிறந்த சாம்பியன் ஒருவர் இருந்தார், இன்று இருக்கைகள் மாறிவிட்டன, மனிதர்கள் மாறிவிட்டார்கள் என டெல்லியில் நடந்த கேரளா அரசின் போராட்டத்தில் பேசியுள்ளார் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
மத்திய பாஜக அரசுக்கும் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் தங்கள் மாநிலத்திற்கு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து, டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு நேற்று "சலோ டெல்லி" என்ற பெயரில் போராட்டம் நடத்தியது. இதில், கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றுள்ளது. நிதி விவகாரங்களில் மத்திய அரசு தென் மாநிலங்களை புறக்கணிப்பதாகக் கூறி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், வரிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போராட்டத்தை பதிவு செய்ய வந்துள்ளோம். பிரதமருக்கு கடிதங்கள் அனுப்பினோம். மத்திய அரசை வலியுறுத்தினோம். எதுவும் நடக்கவில்லை. பல மாநில அரசுகள் ஒன்றாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்தபோதுதான் மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கியது என்றார்.
டெல்லியில் அமைச்சர் பிடிஆர்: முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டத்தில் கருஞ்சட்டை அணிந்து திமுக எம்.பிக்களும் கலந்து கொள்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது, மத்திய பாஜக அரசை காட்டமாக விமர்சித்துப் பேசினார் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். "நியாயமற்ற, அநியாயமான, ஒழுக்கக்கேடான வரிப் பகிர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி பறிக்கப்படுவதற்கு எதிரான எதிர்ப்பின் முக்கிய வெளிப்பாடு தான் இந்தப் போராட்டம்.
ஜெயலலிதா பெயரை சொன்ன பிடிஆர்: ஒரு காலத்தில், தமிழ்நாடு தனது வருவாயில் 70 சதவீதத்தை மத்திய அரசின் வரிப் பங்காகவும், 30 சதவீதத்தை மத்திய திட்டங்களின் மூலமாகவும் பெற்று வந்தது. இப்போது, வரிப் பங்கின் மூலம் பாதிக்கும் குறைவாகவும், மத்திய திட்டங்களில் பாதிக்குக் குறைவாகவும் தான் வருவாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் வரலாறு காணத அளவு வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதற்கு நிவாரண நிதியாக ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை." எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழ்நாட்டின் அண்ணா, கலைஞர் ஆகியோர் கூட்டாட்சிக்காக குரல் கொடுத்ததைச் சுட்டிகாட்டி பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில உரிமைக்காக போராடி உள்ளார். அவர் எங்களுக்கு எதிர்க்கட்சி தான் ஆனாலும் அதை சொல்ல வேண்டும் என கூறினார்.
நரேந்திர மோடி என்றொரு சாம்பியன் இருந்தார்: மேலும் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "இங்கே நான் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவில் முன்பு முதலமைச்சர் ஒருவர் இருந்தார். மத்திய அரசு தங்களை கடுமையாக வஞ்சிக்கிறது என்றார். கூட்டாட்சி தத்துவம் பற்றி பக்கம் பக்கமாக பேசினார். எங்கள் மாநிலத்தின் வரிப் பணத்தை எடுத்து ஏதோ மாநிலங்களுக்கு வாரி இறைக்கிறார்கள் என்றார். அவர் வேறு யாரும் அல்ல, தற்போது நம் நாட்டின் பிரதமராக உள்ள குஜராத்தின் மூன்று முறை முதல்வர் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 3 முறை இருந்தபோது கூட்டாட்சித் தத்துவத்தின் தலைசிறந்த சாம்பியனாக இருந்தார். மத்திய அரசை விமர்சிக்கும் விஷயங்களில் மோடி எங்களின் முன்மாதிரி. மனிதர்கள் மாறுகிறார்கள். இருக்கைகள் மாறுகின்றன. எதுவுமே நிரந்தரம் இல்லை." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications