இலங்கையுடன் பேசி தமிழக மீனவர்களை விடுதலை செய்யனும்.. களத்தில் ராகுல் காந்தி- மத்திய அரசுக்கு கடிதம்!
டெல்லி: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, சிறையில் அடைப்பது, மொட்டை அடித்து அவமதிப்பது, சக்திக்கு மீறிய பெருந்தொகையான அபராதம் விதிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என அட்டூழியங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த பயனும் இதுவரை ஏற்படவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ஆபத்தில் சிக்கிய இலங்கை கடற்படையினரை பாதுகாக்க தமிழ்நாட்டு மீனவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டிவிட்டார் தமிழக மீனவர்கள் என 37 பேரை கைது செய்திருக்கிறது.
இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த செப்.21-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகின்றன. அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications